இலக்கியத்துறையின் ஒருபெண் ஆளுமை - பத்மா சோமகாந்தன்
சாதனைப் பெண்கள் பற்றி நூற்றுக்கு மேல் ஆற்றல், அறிவு குறித்த கட்டுரைகளை எழுதியவரும் 'ஈழத்து மாண்புறு மகளிர்', 'ஈழத்துத் தமிழ்ப் பெண் ஆளுமைகள்' எனப் பெண்கள் பெருமையை நூல் வடிவில் கொணர்ந்தவரும் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துத்துறையில் அதிகமாக ஈடுபட்டு வருபவருமான ஈழத்து இலக்கியவாதி பத்மா சோமகாந்தனுடனான ஒரு கலந்துரையாடல்
பெண்ணாக இருந்தும் சிறுகதை கட்டுரை எனப் பல்வேறு துறைகளிலும் நீங்கள் காலடி பதிக்கக் காரணம் என்ன?
சிறுவயதிலிருந்தே பாடசாலையில் பாட்டு பேச்சு, இசை, எழுத்து, நடித்தல், நடனம் என்பவற்றில் அதிக ஆர்வமும் ஆசையும் கொஞ்சம் திறமையுமிருந்ததன் காரணமாக ஆசிரியர்களும் ஊக்கம் தந்தனர். வீட்டுச் சூழலிலும் எனது தாயார் சகோதரிகள் யாவரும் ஓரளவு பாடுவார்கள். சினிமாவைப் பார்த்துவிட்டு ஊஞ்சலில் இருந்து ஆடியபடி வள்ளித் திருணம், சிந்தாமணி, சிவகாமி போன்ற பாடல்களில் வரும் வசனம், பாடல்களெல்லாம் அப்படியே ஒப்புவிப்பேன். இப்படியே பாடியும் பேசியும் நடித்து வந்த பழக்கத்தில் பாராட்டும் கிடைத்தால் சொல்லவா வேண்டும். ஆகவே இளமையிலிருந்தே இவற்றில் ஒரு சுவையும் சுகமும் தானாகவே ஏற்பட்டு விட்டது. என் ஆற்றலுக்ெகட்டியபடி இப்படித்தான் தமிழ்மொழியிலும் இலக்கியத்திலும் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது.
பெண்கள் எழுத்துத் துறையில் முன்னேறுவதற்கு எதிர்நோக்கும் சவால்கள் என்ன?
எழுதுபவர்கள் எல்லோரும் எழுத்தாளர்கள் என்று கருதுகின்ற இன்றைய காலக்கட்டத்திலே எழுதுவது ஒரு தவம் என்றும் குறிப்பிடுவார்கள். அதாவது ஒரு சிறந்த எழுத்தாளர்களாவதற்கென்று இயற்கையான ஆற்றல்கள் சிலருக்கு இயல்பாகவே இருக்கின்றது. அத்தோடு எழுத்துத் துறையில் பெண்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள் என்று கூறும் பொழுது எழுத்தில் மட்டுமல்ல சகல துறைகளிலுமே பெண்களுக்கு சவால்கள் உண்டு. பொதுவாக ஒரு பரந்த உலகியல் அறிவு பெண்களுக்கு நிச்சயமாக இருக்க வேண்டியது அவசியம். பெண்களுக்கு மாத்திரமல்ல எழுத்தாளர்கள் எல்லோருக்கும் இருக்க வேண்டியது அவசியம். அந்த ரீதியில் நாம் பார்க்கும் பொழுது அதிகமாக வாசிப்பது இலக்கியத்துறைக்கு ஒரு சக்தியாக அமையும்.
இன்றைய காலகட்டத்திலே பெண்களுக்கு வாசிக்கக் கூடிய வாய்ப்புக்கள், நேரம், நல்ல சிந்தனையைத் தூண்டக் கூடிய நூல்கள், புதிய புதிய வரவுகள் குறைவாகவே கிடைக்கின்றது. பொதுவாக நாம் சிந்திப்போமேயானால் ஒரு நூலகத்திற்குச் சென்று அங்கிருந்து வாசிக்கக் கூடிய சாத்தியப்பாடுகள் பெண்களுக்கு மிகவும் குறைவாகவே இருக்கின்றது. அதற்கான நேரம் போக்குவரத்திற்கான வாய்ப்புக்கள் இப்படியான பிரச்சினைகள் பெண்களுக்கு நிறைய இருக்கின்றது. என்றாலும் வெளிவருகின்ற சில நல்ல நூல்களைப் பற்றி அறியவும் மிகச் சிறந்த எழுத்துக்களை வாசிக்கக் கூடிய வாய்ப்புக்களும் பெண்களுக்கு இல்லாது இருப்பதும் ஒரு சவால் என்று நாம் கருதலாம்.
வீட்டு வேலைகள் ஒரு சுமை. அதேநேரம் படித்த பெண்களாக இருந்தால், உத்தியோகம் பார்ப்பவர்களாக இருந்தால் அது அவர்களுக்கு வேலைச் சுமை. உத்தியோகத்திலே இருக்கின்ற வேலைகளை வீட்டிலே கொண்டு வந்து பார்க்கும் தேவைகள் சிலருக்கு இருக்கின்றது. அதே வேளையிலே வீடு, குடும்பம் என்று அவர்களுடைய எழுத்து சிந்தனை சிதைந்து போவதற்கான வாய்ப்புக்கள் ஆண்களை விட பெண்களுக்கு பெரிய சவாலாக அமைந்திருக்கின்றது என்பதை நான் இங்கே குறிப்பிட்டு தான் ஆக வேண்டும்.
அடுத்ததாக அவர்கள் தனியாக பல இடங்களுக்குச் சென்று அதாவது எழுத்துத் துறையில் கட்டாயமாக பயணம் செய்யும் அனுபவமும் அவர்களுக்கு மேலதிகமான அறிவைத் தரும் என்று நினைக்கின்றேன். ஆண்கள் நினைத்தவுடனேயே ஒரு இடத்துக்கு வசதியாக போய் வரக்கூடிய வாய்ப்புக்கள் அவர்களுக்கு உண்டு. ஆனால் பெண்களுக்கு அவ்வாறான நினைத்த ஒரு இடத்திற்கு சென்று வரக்கூடிய வசதி வாய்ப்புக்கள் இலகுவாக ஏற்படுத்தக் கூடிய ஒரு விடயம் என்று என்னால் கருதமுடியவில்லை. இவையெல்லாம் கூட பெண்களுடைய எழுத்துத் துறையின் முன்னேற்றத்திற்கு சவாலாக அமைந்திருக்கிக்கின்றது என்று நான் கருதுகின்றேன்.
இலக்கியத்துறையில் இன்றைய பெண் தலை முறையினரும் அன்றைய பெண் தலைமுறையினரும் ஆற்றிய பாத்திரங்களின் வேறுபாடு என்ன?
ஆண் என்றால் முதன்மையானவன், மேலானவன் பெண்ணென்றால் குறைவானவள் எதற்கும் அடங்கியொடுங்கிப் போக வேண்டியவள், பேதமை மிக்கவள் என்ற போக்கில் இன்றைய தலைமுறை பெண்களுக்கும் அன்றைய தலைமுறை பெண்களுக்கும் பாரிய இடைவெளி இருக்கின்றதை நான் அவதானிக்கின்றேன். காரணம் அன்றைய பெண்கள் தியாகம் செய்பவர்களாகவும் விட்டுக் கொடுப்பவர்களாகவும் சுயமாகச் சிந்தித்துத் தானாகவே முடிவெடுக்கக் கூடிய ஆற்றலை வளர்த்துக் கொண்டவளாக அன்றியும் எல்லாவற்றுக்கும் பிறர் கருத்தையே அனுசரித்து போகக் கூடியவர்களாகவும் மிகவும் கீழ்படியக் கூடியவர்களாகவும் தனக்ெகன வாழாது பிறருக்காகவே அதிகம் வாழ்ந்ததாக இலக்கியங்கள் பேசுகின்றன. ஆனால் இன்றைய பெண்கள் இப்படியானவர்களாக இருந்தால் இவர்கள் மரபையொட்டி வாழ்கின்றார்கள் என்று சொல்லக்கூடியதாக இருக்கின்றதேயன்றி இவர்கள் இன்றைய சூழலுக்கேற்ற பெண்களாக வாழ்கின்றார்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஏனென்றால் அன்றைய நிலையிலிருந்து இன்றைய சூழல் மிகவும் வேறுபட்டிருக்கின்றது. இன்றைய சூழலிலே இப்படியான அக்காலப் பெண்கள் போல் இருந்தால் நாம் எதிலும் முன்னேற முடியாது. ஆகையினாலே இன்றைய பெண்கள் தனது சூழலையும் தன்னைப் பற்றிய எல்லா விடயங்களையும் கொஞ்சம் அறிவார்ந்தவர்களாக, விழிப்புணர்வு உள்ளவர்களாக இருப்பதை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. காரணம் அன்றைய பெண் வளர்க்கப்பட்ட விதம் பெரியவர்களோ, ஆண்களோ என்ன சொன்னாலும் தலை குனிந்து நடக்க வேண்டும். சரி பிழை சொல்வதற்கு அவளுக்கு இடமே இல்லாமல் தான் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய பெண் அப்படியல்ல. அவள் இளமையிலேயே கல்வி கற்று உலகத்தை, தனது குடும்பத்தை, பலரையும் புரிந்து கொண்டு வாழ்கின்ற ஒரு பெண்ணாகத்தான் இன்றைய பெண் காணப்படுகிறாள். எனவே இன்றைய பெண்ணுக்கும் அன்றைய பெண்ணுடைய போக்குக்கும் பல வித்தியாசங்களை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அதற்கு காரணங்கள் இன்றைய பெண்கள் கல்வி கற்றிருக்கின்றாள். உலகியல் அறிவியலை ஓரளவாவது ஊடகங்கள் மூலம் அவள் அறிந்திருக்கின்றாள்.
ஆதலால் இன்றைக்கு ஏதாவது தவறு நடந்தால் அதை எதிர்த்துக் கேட்கக் கூடிய ஒரு துணிச்சலும், தன்னம்பிக்கையும், ஆற்றுலும், திறமையும் அவளிடம் வளர்ந்து வருவதை நாம் நிச்சயமாக அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. எனவே இன்றைய பெண்ணுக்கும் அன்றைய பெண்ணுக்கும் பாரிய இடைவெளி இருக்கின்றது என்று தான் நாம் கூற வேண்டும். இன்றைய நூல்கள், இலக்கியங்கள், ஊடகங்கள் எல்லாமே இன்றைய பெண்களின் வளர்ச்சியை நோக்கியே தான் தங்களது செய்திகளை சொல்லிக்கொண்டிருக்கின்றதும் ஒரு காரணமாகும். எனவே அவர்களுடைய போக்கிலே பல மாறுதல்கள் இருக்கின்றதை நாம் அவதானிக்கின்றோம்.
ஒரு பெண்ணான நீங்கள் இத்துறையில் முகங்கொடுத்த சவால்கள் என்ன?
எங்களுடைய சமூகத்துக்கு பெண்கள் கல்வி கற்பதும் வெளியே சென்று தொழில் பார்ப்பதும் விரும்பமில்லை தான். ஆனாலும் அயலில் உள்ளவர்களால் பெண் பிள்ளையை எதற்காக படிப்பிக்க வேண்டும்? உத்தியோகத்திற்கு அனுப்ப போகின்றீர்களா போன்ற கேள்விகளும் வரத்தான் செய்தன. எங்களுடைய காலத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வதென்பது குடும்பத்துக்கு அவமரியாதை. பெண் உழைத்துச் சாப்பிடுவதா? என்ற வினா எங்கள் மத்தியில் மட்டுமல்ல பொதுவாகச் சமூகத்தின் மத்தியிலேயே பெண் கல்விக்கு எதிரான பாய்ச்சல்களும் ஏச்சுக்களும் சீறுவானங்களாக வெடித்துக் கிளம்பின.
உழைப்பென்றால் ஆண்கள் தான். பெண்கள் வீட்டை விட்டு வெளியே சென்று உழைக்கக் கூடாது. பெண்கள் வருமானத்தை அதாவது பணத்தை எதிர்பார்க்கக் கூடாது. பெண்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்ற கருத்து உறுதியாகவே இருந்தது. அப்போது பெண்கள் உத்தியோகம் பார்ப்பதென்பது தரக் குறைவாகவும் அவமானமாகவும் தவறானதாகவும் கருதப்பட்டது.
அது மட்டுமல்லாது அக்காலத்தில் ஒரு பள்ளிக் கூடத்திற்கு அதிபராக வருவதற்கான எல்லா தகுதியும் எனக்கு இருந்தது. ஆனாலும் என்னை எதிர்த்து ஒரு உதவி ஆசிரியர் ஒருவர் தான் அதற்கு அதிபராக வரவேண்டும் என்ற ஆசையில் என்னைப் பற்றி தவறான கருத்துக்களை அதாவது அந்தப் பள்ளிக் கூடத்தில் பிற்படுத்தப்பட்ட பிள்ளைகளும் படிக்கின்றனர் என்பதால் எல்லாப் பிள்ளைகளையும் ஒரே மாதிரி பார்க்க மாட்டார். இதனால் பள்ளிக்கூடத்திற்கு ெபரிய பிரச்சினை வரும். அது மட்டுமல்லாது இவர் ஒரு பெண். இவர் மகா வித்தியாலயத்தை நடத்த மாட்டார். ஒரு பெண்ணால் இதை நடத்த முடியாது. ஏனென்றால் அங்கு மேல் வகுப்புகளில் ஆண் பிள்ளைகளும் கற்கின்றார்கள். இவர் எல்லாப் பிள்ளைகளையும் சமத்துவமாக பார்க்க மாட்டார் என்றெல்லாம் என்னைப் பற்றி தவறான கருத்துக்களை கடிதங்கள் மூலம் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்தார். ஆனாலும் பிறகு எனக்கு அதை விட நல்ல பள்ளிக்கூடம் கிடைத்து அதற்கு அதிபராக நான் பணியாற்றினேன்.
ஆனாலும் நான் 40, 50 வருடங்களாக எது முற்போக்கு, யாழ்ப்பாணத்தில் சாதியமைப்பு அழிய வேண்டும் என்றெல்லாம எவ்வளவு தூரம் பேசியும் எழுதியும் பாடுபட்டும் கூட என்னைப் பற்றி இன்னும் புரிந்து கொள்ளாமல் இப்படியெல்லாம் எழுதினார்களே இந்த முட்டாள்கள் என்று எனக்கு மிகவும் கவலையாகவே இருந்தது.
உங்கள் ஆக்கங்களில் பெண்ணிய கருத்துக்களை அதிகம் பிரதிபலிப்பதற்கான காரணம் என்ன?
யாரை நோய் வருத்துகிறதோ அதிலிருந்து மீள அவர் மருந்தெடுக்க வேண்டும். அதேபோல் எங்கே பள்ளம் இருக்கிறதோ அதனை மட்டமாக சமமாக்குவதற்கு பள்ளம் நிரப்பப்பட வேண்டும். அப்படியே ஆண் பெண்ணென்ற சமமான இரு உயிரினங்களிடையேயும் நீதி சமத்துவமின்றி ஆணுக்ெகாரு நீதி பெண்ணுக்ெகாரு நீதி என்ற அநீதி அறவே அழித்தொழிக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் தான் ஆண் பெண்ணுக்கிடையில் நிலவும் அசமத்துவ நிலை மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தில் பெண்கள் தொடர்பான உரிமைளுக்காக குரல் கொடுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.
இன்றைய பெண் தலை முறையினருக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
எங்கு அநீதி நடந்தாலும் அதை எதிர்த்து குரல் கொடுப்பதற்கு பெண்கள் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்க வேண்டும். ஆனால் அதில் ஒரு குறைபாடு இருக்கின்றது. ஒரு பெண் மாத்திரம் தனித்து இருக்காமல் சமுதாயத்திலே இடம்பெறுகின்ற தவறான காரியங்களை எடுத்துக் கூறுவதற்காக ஒரு பெண்கள் அமைப்பை இளம் பெண்கள் எல்லோருமாக சேர்ந்து அதாவது ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் அன்னையர் முன்னணி என்ற அரசியல் ஆட்களை நெறிப்படுத்தக் கூடியதாக ஒரு முன்னணி இருந்தது.
அதேபோல் பெண்கள் முன்னணி என்று ஒரு முன்னணியை இவர்கள் அமைத்தால் பெண்களுக்கு நடைபெறுகின்ற அநீதிகளை தட்டிக் கேட்கக் கூடிய பலமாக தங்களுடைய அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு சமுதாயத்தை நெறிப்படுத்துவதற்கு இவர்கள் எல்லோரும் முன்னணியில் நின்று எம்மால் முடியும் என்ற எண்ணத்துடன் பாடுபட வேண்டும் என்பது எனது நீண்ட கால ஆசை. அதை கட்டாயமாக இளம் பெண்கள் நிறைவேற்ற வேண்டும் என்று நான் பணிவாகவும் தயவாகவும் கேட்டுக் கொள்கின்றேன்.
பெண்கள் ஒன்றுபட்டு உழைத்தால் எந்த நல்ல காரியத்தையும் சாதிக்கலாம். அத்தகைய சக்தி பெண்களிடம் உண்டு. அதுமட்டுமல்லாது பேஸ்புக் போன்ற சமூக தளங்களில் பெண்கள் தமது நேரத்தையும் காலத்தையும் வீணாக்காமல் நல்ல அறிஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனைவாதிகள் ஆகியோர்களின் நூல்களை அதிகமாக வாசிக்க வேண்டும். வாசித்து தங்களுடைய சிந்தனைகளையும், அறிவையும் அறிவுப் பரப்பையும் நிச்சயமாக அகலப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்தோடு நீங்கள் இந்த சமுதாயத்துக்கு 'என்னால் என்ன செய்ய முடியும்' என்பதை பற்றியும் சிந்தித்து அதற்கான செயற்பாட்டில் இறங்கவும் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். அப்போது தான் எமது சமுதாயம் முன்னேறும்.
தினகரன் -



















