வழக்கறிஞரும், செயல்பாட்டாளருமான, விருதுநகர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த திவ்யா பாரதி எனும் தமிழ் நாட்டுப் பெண். மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளிகளின் பிரச்சினைகளை முன்வைத்து 'கக்கூஸ்' என்ற பெயரில் 105 நிமிட ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த ஆவணப்படம் (26-.02-.2017) அன்று திரையிடப்பட்டது.
இது குறித்து திவ்யா கூறுகையில்,
'ஒருமுறை மலம் அள்ளும் துப்புரவுப் பணியாளர்க்ள சிலர் தங்களது பணியின் போது விஷ வாயு தாக்கி இறந்த நிலையில் கதறி அழும் அவர்களது இளம் மனைவிகளைக் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த துயரத்தை அப்படியே போகட்டும் என விட்டு விட்டு என்னால் வேறு வேலையில் கவனம் செலுத்த இயலவில்லை. அவர்களது நீண்ட காலப் பிரச்சினையை இந்த அரசு தீக்க வேண்டும். மக்களின் மனதில் சக மனிதர்களை இப்படி ஒரு கீழான வேலைக்கு உட்படுத்துவதன் பெயரிலான குற்ற உணர்வைத் தட்டி எழுப்ப வேண்டு என்பதே இந்த ஆவணப் படத்தின் நோக்கம் எனத் தெரிவித்திருக்கிறார்.
மலசல கூடம் என்று தமிழில் அழைக்கப்பட்டாலும் சாமான்ய மக்கள் மத்தியில் பேச்சு வழக்கில் கக்கூஸ் என்றே அழைக்கப்படுகிறது. இந்த குறுங்கட்டுரையின் அழுத்தம் கருதி நாமும் அப்படியே அழைப்போம்.
உலகில் இந்தியாவைப் போல கக்கூஸ் பிரச்சினை பெரும் பேசுபொருளாக வேறெந்த நாட்டிலும் இருக்க முடியாது. இந்தியாவில் இது ஒரு அடிப்படைத் தேவை என்கிற புரிதல் இல்லாமலேயே அரசியல் அதிகாரம் தொடர்ந்து வருகிறது.
கக்கூஸ் ஒரு டச்சு மொழிச் சொல். கிராமங்களில் வீட்டுக்கு வெளியே சற்று தூரத்தில் கழிவறை தனியாக கட்டப்பட்டிருக்கும். முன்பு ஐரோப்பாவில், நெதர்லாந்திலும் அப்படித் தான் கட்டி இருந்தார்கள். பழைய டச்சு மொழியில் அதை "Kak huis" (மல வீடு) என்று அழைத்தனர்.
அந்தச் சொல்லின் உச்சரிப்பு, காக் ஹவ்ஸ் அல்லது காக் ஹூஸ் என்று வரும். அது மருவி தமிழில் கக்கூஸ் ஆனது. அது கொச்சையான புரிதலின் காரணமாக இன்று அந்தச் சொல் வழக்கொழிந்து போய்க் கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த ஆவணப் படம் பேசுவது அது பற்றியல்ல. இந்த கக்கூசுக்கும் சாதியத்துக்கும் உள்ள உறவையே பச்சையாக அழுத்தம் திருத்தமாக முன்வைக்கிறது. கஷ்டப்பட்டேனும் அந்த உண்மையையும் யதார்த்தத்தையும் “நுகர்ந்தே” ஆக வேண்டும்.
இன்னமும் மனிதமலத்தை கைகளால் அள்ளி கூடையில் வைத்துக் கொண்டு மலம் வடிய வடிய தூக்கிச்சென்று கொட்டும் தொழில் உலகில் இந்தியாவைத் தவிர வேறெங்கும் கிளைகள் கிடையாது. அதுபோல மலக் குழிகளில் இறங்கி அதனைச் சுத்தம் செய்து அடைப்புகளை நீக்கும் தொழிலும் எங்கெங்கும் நீடித்தே வருகிறது. அதற்குள்ளேயே மரணமான தொழிலாளர்கள் பற்றிய பல செய்திகளைக் கூட நாளாந்தம் வெளிவந்த வண்ணமே உள்ளன.
இதன் காரணமாக நோய்வாய்ப்பட்டவர்களும், அவர்களின் குடும்பத்தவர்கலைத் தாக்கிய தொற்றுக்கள் குறித்தும் கூட நிறைய பதிவுகள் உள்ளன. அணுப்பரிசோதனை செய்தும், விண்வெளி ஆய்வுகளில் சமீப காலமாக மும்முரமாக இருக்கும் இந்தியாவால் இன்னமும் கக்கூஸ் சிக்கலையும் தீர்க்க முடியவில்லை, மலமள்ளும் தொழிலைக் கூட இயந்திரமயப்படுத்தவும் முடியவில்லை என்பதை உலக நாடுகள் கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றன.
இதில்பரிதாபத்துக்குரிய விடயம் என்னவென்றால் இந்த “கக்கூஸ்” சார்ந்த தொழில்களுக்கு குறிப்பிட்ட தலித் சாதியினரை பயன்படுத்தி வருவது தான். இதனை குறித்த சாதியின் பொறுப்பாகவும் கடமையாகவும் ஆக்கியிருப்பது “அதிசய இந்தியா” (Incredible India)தான்.
இந்த சாதியினரை இத்தொழிலை செய்ய நிர்ப்பந்திக்கும் சாதியத்தை இன்னமும் தகர்க்க முடியாத இந்தியா அது. அந்தப் பணியை செய்ய மறுப்பவர்களின் மீது வன்முறை ரீதியிலான தண்டனையை அளித்து இந்து நாகரித்தை வெளிப்படுத்தும் இந்தியா அது.
இந்த ஆவணப்படம் அத்தகைய இந்தியாவை கூனிக்குறுகி குற்ற உணர்வுக்குத் தள்ளும் முக்கிய பதிவு. கூடவே இத்தொழிலை செய்யும் துப்பரவுப் பணியாளர்களையும், அத்தொழிலை நிர்ப்பந்திக்கும் சாத்திய சமூகத்துக்கும், இவற்றை எப்போதும் வேடிக்கைப் பார்த்தபடி கடந்து செல்லும் மகாஜனங்களுக்கும் விழிப்புணர்வைத் தரும் ஆவணமும் கூட.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் அவலங்கள், ரணங்கள், தீண்டாமை வடுக்கள் அனைத்தையும் துணிச்சலாக வாக்குமூலங்களாக பதிவு செய்திருக்கிறார் திவ்ய பாரதி.
நாம் வாழும் சமூகத்தில் சக மனிதர்களின் துன்பத்தை துடைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை அதைத் தூண்டாத சமூகத்தை உருவாக்கினாலே இந்த ஆவணப்படம் வெற்றி பெற்றுள்ளது என்று ஆறுதல் அடையலாம்.
தூய்மைப் பணியாளர்களின் துயர்மிகு வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் வேர்க்காரணம் சாதி தான் என்கிற அடிப்படையில் அந்த வேரைப் பிடுங்குவது தான் அடிப்படை இலக்காக இருக்கின்ற போதும் நடைமுறைப் பிரச்சினைகளை ஒத்தி வைத்து விட்டு இலக்குக்காக போராடிக் கொண்டிருப்பதில் பலனில்லை என்கிறது இந்த ஆவணப்படம்
மலமும் மலம் சார்ந்த உண்மைக் காட்சிகளும், மலம் அள்ளும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையும் தான் 'கக்கூஸ்'. இதைப் பார்க்கும்போது பார்வையாளர்களாகிய நம்மில் பலருக்கும் வாந்தியெடுக்கும் உணர்வு வரலாம். முகம் சுளிக்கலாம். கண்களை மூடிக்கொள்ளலாம். இத்தனையும் நடக்கலாம்.
ஆனால் உண்மைகள் எப்போதும் இனிப்பவையல்ல, சுகமானவையுமல்ல. “கக்கூஸ்” நமக்கு மகிழ்ச்சியைத் தராது. ஆனால் அதிர்ச்சி மிகுந்த உண்மையைத் தந்திருக்கிறது. அந்த உண்மை அறிதலுக்காக ஒரு முறை நீங்களும் பாருங்களேன்.
நன்றி - தினகரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக