செவ்வாய், 8 செப்டம்பர், 2020

பெண்தான் பெண்ணியம் பேசவேண்டும் என்பதல்ல! - அனுதர்ஷி லிங்கநாதன்


சென்னை பூவரசி அறக்கட்டளை பூவரசி நிறுவனங்கள் வழங்கும் பூவரசி விருதுகளில் பெண் ஆளுமைக்கான விருதுக்கு அனுதர்ஷி லிங்கநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழக திருமலை வளாகத்தில் தொடர்பாடல் கற்கை  உதவி விரிவுரையாளராகவும், சுதந்திர  ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகிறார்.  அவருடன் மனம் திறந்த கலந்துரையாடல்... 
பூவரசி அறக்கட்டளை பூவரசி ஊடக நிறுவனம் வழங்கும் பூவரசி பெண் ஆளுமை விருதுக்காக உங்களை  தெரிவு செய்ததற்கான காரணம் என்ன?
நான் ஓர் சுதந்திர ஊடகவியலாளராக யுத்தத்தின் பின்னும் முன்னும் எனது தனிப்பட்ட கோணத்திலான படைப்புக்களை பெண்கள் சார்ந்ததாகவும் சமூகப் பிரச்சினைகள் சார்ந்ததாகவும் எழுதி வருகிறேன். அத்தோடு அரச சார்பற்ற நிறுவனங்களில் எனது சமுதாய நோக்கிலான பணிகளுக்காகவும் இவ் விருதுக்கு நான் தெரிவு செய்யப்பட்டிருக்கலாம் என கருதுகிறேன். 
இவ் விருது ஊடகத்துறையில் எனக்கான ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றது என நினைக்கிறேன்.
உங்களது ஊடக ஆர்வமும் எழுத்துத்துறை பிரவேசமும் பற்றி....?
பாடசாலைக் காலத்திலிருந்தே வாசிப்பின் மீதும் எழுதுவதிலும் ஆர்வம் இருந்தது. நல்ல புத்தகங்கள் தான் என் தேடலுக்கான பதிலையும் தன்னம்பிக்கையையும் கொடுத்தது. ஊடகவியலாளராக வர வேண்டும் என்பதுதான் எனது இலட்சியமாகவும் இருந்தது. எனது உயர் கல்வியைக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் தொடர்பாடல் கற்கைகளைத் தெரிவு செய்து தொடர்ந்தேன். பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் டிப்ளோமா, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் எனது தொழிற் பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டேன். அதுவே எனது ஊடகப் பிரவேசமாக இருந்தது. தமிழ் தந்திப் பத்திரிகையில் ஊடகவியலாளராகவும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடகப் பிரிவுகளிலும் கடமையாற்றினேன். கட்டு மரம் ஊடகவலையமைப்பு போன்ற இணையதளங்களிலும் சுடர் ஒளி பத்திரிகையிலும் எழுதி வருகிறேன். தற்போது சுதந்திர ஊடகவியலாளராகவும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றுகின்றேன். அதுமட்டமல்லாது காண்பவற்றை ஆக்கபூர்வமான படைப்புக்களாக்கும் புகைப்படத்துறையிலும் ஆழமான ஈடுபாட்டைக் கொண்டிருக்கிறேன்.
உங்கள் ஊடகத்துறை கற்பித்தல் பற்றி?
விரிவுரையாளராக இருப்பது எனக்குப் பிடித்தமான விடயமாக இருக்கிறது. என்னை இந்தத் துறையில் மேலும் வளர்த்துக் கொள்ளவும் ஊடகத்துறையில் தொழிற் தேர்ச்சி பெற்ற சிறந்த ஊடகவியலாளர்களை உருவாக்கவும் முடியும் என நம்புகிறேன். அத்ேதாடு ஊடகக் கல்வியை சிறந்த முறையில் கற்கின்றவர்களால் தான் ஊடக தர்மத்தை கடைப்பிடிக்க முடியும். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகின்ற ஊடகத்துறை இன்று தடம்மாறி ஊடக தர்மத்தைக் காற்றில் பறக்க விடுவதாகவும் வன்முறைகளுக்கு வழிவகுப்பதாகவும் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் சரியான ஊடகக் கல்வி இன்மையே. 
இலங்கையில் யாரும் ஊடகவியலாளராக இருக்கலாம் என்ற நிலையே தற்​ேபாது  காணப்படுகின்றது. நீங்கள் ஊடகத்துறையில் அதிகமாக ஈடுபாடு காட்டும் விடயதானம் (subject) எது? அதற்கான காரணம் என்ன?
நேர்காணல்கள், சமூகப் பிரச்சினைகள் தொடர்பான கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதில் அதிகம் ஈடுபடுகின்றேன். அரச சார்பற்ற நிறுவனங்களில் வட மாகாணத்தில் பணியாற்றிய போது போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளை உணர முடிந்தது. அதுமட்டுமல்லாமல் நானும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்திலேயே இருக்கிறேன். அதனால் அந்த மக்களுடைய பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறேன். அது பற்றி எனது கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். மலையகம் உட்பட பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள பிரச்சினைகளை நேரில் சென்றுஆய்வுகளைச் செய்திருக்கின்றேன். நேரில் பார்த்து, உணர்த்து, அவ் விடயங்களை அழமாக ஆய்வு செய்து பக்கச்சார்பற்று எழுதும் போதுதான் அது ஒரு சிறந்த ஊடகவியலாக இருக்க முடியும்.
ஊடகத்துறையில் ஒரு பெண்ணாக நீங்கள் முகங்கொடுக்கும் சவால்கள் என்ன?
ஊடகத்துறையில் உள்ள பெண்கள் ஏராளமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தொழில் நிமித்தம் பயணப்படும் போது சில பிரச்சினைகளை எதிர்கொண்டேன். பொதுவாக பெண்கள் பிரயாணங்களின் போது பாலியல் ரீதியான தொந்தரவுகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகிறது. பெண்கள் தனியான தொழில் ரீதியான பயணங்களையும் மேலதிக வேலை நேரத்தையும் பகுத்தறிவுடன் பார்க்கின்ற பக்குவம் எமது சமூகத்தில் உள்ள பெரும்பாலனவர்களுக்கு இல்லை. அச்சுறுத்தல்களை சில சந்தர்ப்பத்தில் எதிர்கொண்டிருக்கிறேன். எனது பாதுகாப்பு குறித்துக் கவலைப்படுகின்ற குடும்பத்தினரின் கருத்துக்களைஅலட்சியப்படுத்த முடியவில்லை.
இத் துறையில் நீங்கள் சாதித்த, மறக்க முடியாத விடயம் என்று எதை கருதுகிறீர்கள்?
இதுவரை பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்று தான் நினைக்கிறேன். எதிர்காலத்தில் நான் எழுதியவற்றைப் புத்தகமாகவெளியிடத் தீர்மானித்திருக்கிறேன். நான் சார்ந்ததுறையில் எனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்குவதே எனது கனவு.
சமயம் கலாசாரம், பண்பாடு என்பதை  வைத்து பெண்களின் ஆளுமைகள் குறைவாக மதிக்கப்படுகின்றது. இதை பற்றி உங்கள் கருத்து?
சில சந்தர்ப்பங்களில் அப்படியிருக்கலாம். பெண்களை மாத்திரம் கலாசாரத்தின் காவலர்களாக காட்டுகின்றவர்களும், சில பிற்போக்கான சமூகக் கட்டமைப்பும் இதற்குக் காரணமாக இருக்கின்றது. மதம் காட்டும் புனிதபிம்பமும் சில சமயங்களுடைய கட்டுப்பாடுகளும் பெண்களுடைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன என்பது உண்மை. மூட நம்பிக்கைகள் ஒரு போதும் சட்டங்குகளாக முடியாது. பிற்போக்கான பாரம்பரியங்களையும் முட்டுக்கட்டைகளையும் தகர்த்து வெளிவர வேண்டும். தனி நபர் ஆளுமையை எதை வைத்தும் குறைவாக மதிப்பிட முடியாது.பெண்கள் தமக்கான சுயத்தை பல்வேறுபட்ட துறைகளிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமூக விடுதலை பற்றி பேசும் போது ஏன் பெண் விடுதலை முக்கியமானதாகிறது?
குடும்பத்தின் ஆதாரம் மட்டுமல்ல சமூகத்தின் ஆதாரமாகவும் பெண் இருக்கிறாள். பெண்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் சுற்றியிருக்கின்ற அனைவரையும் பாதிக்கும். மனிதவள ரீதியாக மட்டுமல்லாமல் அபிவிருத்தி ரீதியாகவும் நாடு முன்னேற்றமடைய பெண் விடுதலை அவசியம். பெண்ணுக்கு முக்கியத்துவமளிக்கின்ற ஒரு சமூகம் தான் மேம்பட முடியும். சமூகத்தின் பெயராலேயே பெண் ஒடுக்கப்பட்டிருக்கிறாள்.பெண்கள் கல்வி அறிவை வளர்த்துக் கொள்வதன் மூலம் தனிப்பட்ட சுதந்திரத்தை நிலைநாட்ட முடியும். ஒரு சமூகத்தில் இருக்கின்ற ஆண்,பெண் இருவரும் இணைந்துதான் சமூக விடுதலைக்காகச் செயற்பட  முடியும். பெண் விடுதலை பெற்ற ஒரு சமுதாயத்தால் தான் முற்போக்கான ஒரு சந்ததியை உருவாக்க முடியும். 'நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம்'
இன்றைய காலக்கட்டத்தில் பெண் ஆளுமைகளின் தேவை எவ்வாறிருக்கிறது?
இன்று எல்லாத்துறைகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் அரசியல், ஊடகம், நீதித்துறை போன்ற துறைகளில் குறைந்தளவான பெண்களே பிரகாசித்திருக்கிறார்கள். இது போன்ற துறைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். குடும்பம்,தொழில் என்ற இரட்டைச் சுமை பெண்களின் முன்னேற்றத்தைப் பின் தள்ளுவதுடன் சில துறைகளை மாத்திரமே தமக்கானதாகத் தீர்மானிக்கவும் காரணமாகின்றது. ஒவ்வொரு பெண்ணும் தனக்கான இலட்சியத்தை தானே தெரிவு செய்வதன் மூலம் தனக்கான சுயத்தை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். எமது சமூகத்தில் அறிவுபூர்வமான முற்போக்குத் தனமான பெண் ஆளுமைகள் மேலும் உருவாக வேண்டும்.
நமது சமூகத்தில் பெண்களை ஆண்கள்  சமமாக நடத்துகிறார்கள் என்று நினைக்கிறீர்களா?
இல்லை, ஒவ்வொரு பெண்ணும் வேறுபட்ட சவால்களை எதிர்கொள்கிறார்கள். சமூகத்தின் சில சூழ்நிலைகளில் பால் நிலை சமமின்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சமூக யதார்த்தத்தில் பெண்களின் நிலைப்பாடு தந்தை வழிச் சமூகத்தின் நிலைப்பாட்டிலேயே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இருக்கின்றது. உடல் சார்ந்த பாலியல் தாக்குதல்களையும் பெண் எதிர்கொள்ள நேரிடுகிறது. பெண்களின் கருத்துக்களுக்கு முகம் கொடுக்க முடியாதவர்கள் பால் சார்ந்த அவதூறுகளைப் பிரயோகிக்கிறார்கள் என்றே கூற வேண்டும். இது தொடர்பில் பலராலும் பல்வேறு தளங்களிலும் பேசப்பட்டு வந்த போதிலும் மாற்றமொன்றுக்கான அழுத்தங்கள் போதுமானதாக இல்லை என்றே கூற வேண்டும்.
இன்றைய பெண்கள் ஆணாதிக்கத்தில் இன்னமும் அடிமைப்படுத்தப்படுகின்றனரா? பெண்ணியம் பேச வேண்டிய காலத்தில் தான் இன்னமும் வாழ்கிறோமோ? 
ஆம், சமூகத்தின் சில படி நிலைகளில் இன்னமும் பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். இது உலகின் பொதுப் பிரச்சினையாகவும் இருக்கின்றது. பெண் என்பதற்கான பாரம்பரியக் கருத்தியல்கள் மாற்றமடைய வேண்டும். பெண்களை அடிமைப்படுத்துபவர்களாக ஆண்கள் மட்டுந்தான் இருக்கிறார்கள் என்று கூற முடியாது. தெளிவான பெண் எழுத்து என்பது சமூகச் செயற்பாடுகள் மற்றும் பெண்களுடைய உரிமைகள் குறித்து பேசுவதற்கான வலிமைமிக்க ஆயுதம். எனவே சமூகத்தில் அடிமைப்படுத்தப்படும் பெண்களுடைய பிரச்சினைகளை பேச வேண்டியது காலத்தின் தேவை. அதன் மூலம் பாரபட்சங்களுக்கெதிரான மாற்றமொன்றை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும். ஆனால் நான் சுதந்திரமான ஒரு பெண்ணாகவே உணர்கிறேன். நான் சார்ந்த மூகம் எனக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழிகாட்டியிருக்கின்றது. எனது குடும்பம் குறிப்பாக எனது மாமனார் சத்தியநாதன் தான் என் கல்விக்கு அடித்தளம் இட்டவர். அவர் உயிரோடு இல்லாத போதும் தன்னம்பிக்கையுள்ளவளாய் என்னை உருவாக்கிய அவரை நான் என்றும் நினைவு கூருவதுண்டு. 
பொதுவாக பெண் எழுத்தாளர் என்றாலே நினைவுக்கு வருவது பெண்ணியம் தான். அவர்களது எழுத்துகள் பெரும்பாலும் பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றியே பேசிக் கொண்டுள்ளன. இந்த நவீன உலகில் பெண்கள், ஆண்கள் எனப் பிரித்துப் பேசுவது பொருந்துமா? 
பெண் எழுத்தாளர்கள் அனைவரும் பெண்ணியம் பற்றி மாத்திரமே பேசவில்லை. அவர்கள் சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு பட்ட விடயங்களைப் பேசக் கூடிய பரந்துபட்ட அறிவு பெண்களுக்கு இருக்கிறது. ஆண்களை விடப் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம். இந்த நவீன உலகில் கூட பெண்கள் நாளாந்தம் ஏராளமான சவால்களை எதிர்கொள்கிறார்கள்.போரினால் பாதிக்கப்பட்டபெண்கள் நாளாந்தம் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். பெண்களுடைய பிரச்சினைகளை பெண்களால் தான் ஆழமாக அணுக முடியும். அதனால் பெண்களுடைய பிரச்சினைகள் பெண் எழுத்தாளர்களால் தான் அதிகம் பேசப்படுகின்றன. பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானதல்ல. பெண்தான் பெண்ணியம் பேசவேண்டும் என்பதும் அல்ல. ஆண் எழுத்தாளர்களில் பெண்ணியம் பேசுபவர்களும் இருக்கிறார்கள். ஆண்களுடைய பிரச்சினைகளைப் பெண்கள் பேச வேண்டிய தேவைப்பாடும் இருக்கின்றது.
ஊடக பெண் ஆளுமையில் தேசிய பத்திரிகைகளில் பெண் பிரதம ஆசிரியரின் தேவை உணரப்பட்டுள்ளதா?
நிச்சயமாக பெண் பிரதம ஆசிரியரின் தேவை உணரப்பட வேண்டியது அவசியம். பால் நிலைச் சமத்துவம் ஊடகத்துறையில்  பேணப்பட வேண்டும். எனது பல்கலைக்கழக ஆய்வொன்றை இவ்விடயம் தொடர்பில் மேற்கொண்டிருந்தேன். இலங்கையின் ஊடகத்துறையை எடுத்துக் கொண்டால் பெண் பிரதம ஆசிரியர்களாக ஒரு சிலரே இருந்திருக்கிறார்கள். குறிப்பாகத் தமிழ் ஊடகத்துறையை எடுத்துக் கொண்டால் தீர்மானமெடுக்கும் அதிகாரத்தில் பெண்களின் வீதம் மிகக் குறைவாகவே உள்ளது.மேலும் ஊடகத்துறையை பெண்கள் தெரிவு செய்வதும் குறைவாக உள்ளது. பெண்கள் ஊடகத் துறையில் தொழிற் தேர்ச்சி பெறுவதுடன் ஆளுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தினகரன் - அனுதர்ஷினி லிங்கநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக