அரசியல் என்றால் அது ஆண்களுக்குரியது என்ற மனப்பாங்கில் மாறுதல் உருவாக வேண்டும்
சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் 20 வருட சட்டத்துறை அனுபவத்துடன் சமூக சேவையாளராகவும் மும்மொழித் தேர்ச்சி பெற்ற மனித உரிமை செயற்பாட்டாளராவார். பெண் உரிமை செயற்பாட்டாளராக சர்வதேச அனுபவமும் வலயமைப்பும் கொண்ட இவர் கடந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் போட்டியிட்டவர்.இவர் டிரான்ஸ் பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா அமைப்பின் சட்ட ஆலோசனை மற்றும் பரிந்துரைக்கான மையத்தின் சட்ட முகாமையாளராக கடமை புரிந்து இலஞ்சம், ஊழலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பெண்கள் தொடர்பாகவும் மேலும் இத் தேர்தலில் வீழ்ச்சியடைந்துள்ள பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பாக மீண்டெழுக்கு வழங்கிய செவ்வியிலிருந்து,....
? நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பெண்களின் வெற்றி வாய்ப்பு மேலும் பலவீனப்பட்டிருப்பதற்கான காரணம்.
முதலில் பெண்கள் வேட்பு மனுவில் உள்வாங்கப்பட வேண்டும். அரசியல் என்றால் அது ஆண்களுக்கே உரியது, அரசியலை தாங்களே தான் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆணாதிக்க சிந்தனை கொண்ட கட்சியின் மனநிலை தான் முக்கியமான காரணம் என்று நான் நினைக்கின்றேன். பல்வேறு கட்சிகளிலும் இந்த நிலைமை இருந்தது. பெண்களை குறிப்பாக வேட்பு மனுவில் உள்வாங்குவதற்கான மனோநிலை கூட அவர்களிடம் இருக்கவில்லை. இதன் காரணமாகத் தான் பிரதான கட்சிகள் பெண்களை தங்களுடைய வேட்பு மனுக்களில் உள்வாங்கவில்லை என்பது முதலாவது காரணம்.
அடுத்த காரணம், அரசியல் கட்சிகளை பொருத்தவரையில் அங்கு தீர்மானம் எடுக்கும் மட்டங்களில் பெண்கள் இன்மையும் மேலும் பெண்களை ஆதரித்து பேசக்கூடியோர் தீர்மானம் எடுக்கும் மட்டங்களில் இல்லாமையும் இன்னொரு காரணம்.
?தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் பெண்களை அரசியலுக்கு கொண்டு வருவதற்கான தனியான வேலைத்திட்டம் உண்டா?
அரச சார்ந்த கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைப் பொருத்தவரையில் பெண்களை உள்வாங்குவதற்கான கட்டமைப்பை கொண்டிருக்கின்றது. இதில் கிராமிய மட்டத்திலிருந்து வட்டார மட்டம், தொகுதி என்று பல்வேறு விதமான கட்டமைப்புகளில் சகல தளங்களிலும் பெண்களை உள்வாங்குவதற்கான ஒரு கட்டமைப்பை கொண்டிருக்கின்றது. நான் நினைக்கின்றேன் இந்த கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி பெண்களை வலுப்படுத்த வேண்டிய ஒரு தேவையும் இருக்கின்றது. இந்த கட்டமைப்பினூடாக கடந்த உள்ளூராட்சி தேர்தலில் பல பெண்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதனூடாக குறிப்பாக நான் வசிக்கின்ற மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்த வரையில் ஒரு பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியினைச் சார்ந்த ஒரு பெண் தலைமைத் தாங்குகின்றார்.
ஏனைய கட்சிகளிலும் பார்க்க தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைப் பொருத்தவரையில் பெண்களை உள்வாங்கியிருக்கின்றார்கள் என்றே கூற வேண்டும். இதனடிப்படையில் அதனுடைய மகளிர் அமைப்பானது கிராமிய மட்டத்திலிருந்து தொகுதி மட்டம் வரைக்கும் ஒரு வலுப்பெற்ற கட்டமைப்பை கொண்டிருக்கின்றது.
?.அரசியலில் ஈடுபட பெண்களுக்கு இன்றுள்ள தடைகள்..
அரசியல் என்பது மிகப் பெரிய பிரச்சினை. இது தமிழ் பெண்களுக்கு மட்டுமல்ல எனக்குத் தெரிந்த வெவ்வேறு மாவட்டங்களில் போட்டியிட்ட பெண்களுக்கும் இப் பிரச்சினை இருந்தது. உதாரணமாக.. கொழும்பு மாநகர உறுப்பினராக இருந்து பின்பு யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட உமா சந்திரபிரகாஷ், ஏற்கனவே சுதந்திர கட்சியி உறுப்பினராக இருந்தவர். அதற்கு பிறகு அவர் யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் போது சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டார். அதேபோல், ஹிருணிகா பிரேமசந்திர ஏற்கனவே இருந்த கட்சியில் இல்லாது இம்முறை அவரும் சஜித்தின் தலைமையிலான கட்சியில் போட்டியிட நேர்ந்தது. மலையகத்தைப் பொருத்த வரையில் அனுஷா சந்திரசேகரனுக்கும் அதே நிலை தான். அவருடைய தந்தையால் உருவாக்கப்பட்ட கட்சியில் கூட அவருக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை. எனக்கும் அதே கதிதான். எங்களுடைய பரம்பரையாக வந்த கட்சியில் இடம் கிடைக்கவில்லை. நான் இன்னொரு கட்சியில் தான் போட்டியிட்டேன். மொத்தத்தில் பார்க்கப் போனால் பெண்களை உள்வாங்குவதற்கு எந்த கட்சியும் தயாராக இல்லை என்று தான் நான் சொல்வேன்.
?பெண் வாக்காளர்களின் வாக்களிப்பு வீதம் வீழ்ச்சிக்கான காரணம்?
நான் போட்டியிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்தவரையில் 56 வீதமான பெண் வாக்காளர்கள் இருந்தார்கள். ஆனாலும், வாக்களிப்பு வீதம் குறைவு என்று நாங்கள் சொல்ல முடியாது. அரசியல் தொடர்பான கூடுதலான விளக்கம் அல்லது அறிவு கொண்டவர்களாக ஆண்களே தான் இருக்கின்றார்கள். சாதாரணமாக பெண்கள் அரசியல் என்பது ஒரு விடயமாக கருதுவதில்லை. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆண்களைப் பொருத்தவரையில் அவர்கள் ஆண்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு அரசியல் பேசக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. அவர்களுக்கு வெளித்தகவல்கள் கிடைப்பது மிகமிக அதிகம். இவ்வாறான காரணிகளால் சுற்றுச் சூழல் அறிவு, விளக்கம் கூடியவர்களாக ஆண்கள் இருக்கின்றார்கள். பெண்களை பொருத்தவரையில் நான் நினைக்கின்றேன் அவர்களுக்கு அரசியல் பற்றிய ஒரு தெளிவூட்டும் தேவை இருக்கிறது. ஆனாலும் இம்முறை பெண்கள் அமைப்புகள் பொருத்தவரையில் பெண்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக சில முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு போன்ற பல்வேறு பகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'அவளுக்கு ஒரு வாக்கு' என்கின்ற பிரசாரம். பெண்களுக்கு சென்றடைந்திருக்க வேண்டும். ஆனாலும் இன்னும் கூடுதலான விழிப்புணர்வு பெற வேண்டிய ஒரு கட்டாய தேவை இருக்கின்றது.
?2020 பொதுத் தேர்தலில் பெண்ணாக நீங்கள் எதிர்கொண்ட முட்டுக்கட்டைகள்?
அரசியலில் எதிர்கொண்ட சவால்கள் என்று நாங்கள் பார்க்கும் போது முதலாவது ஒரு கட்சி அரசியலுக்குள் ஒரு பெண் வேட்பாளராக உள்வாங்கப்படுவதே ஒரு பாரிய சவாலாக நான் பார்க்கிறேன்.
இந்த அரசியல் போட்டியென்பது இது ஆண்களின் உலகம். இதில் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். நீங்கள் எதையும் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். ஆகவே, இந்த போட்டித் தன்மை நிறைந்த ஆணாதிக்க அதிகாரம் கொண்ட இந்த அரசியலுக்குள் பெண்கள் உள்நுழைந்து தங்கள் அரசியலை தக்க வைப்பதென்பது ஒரு பாரிய சவால்.
தேர்தல் தொடர்பான பல்வேறு விதமான பிரசாரத்துக்கான நிதியென்பது பாரிய சவால். சாதாரண மாத வருமானத்தை பெற்றுக் கொண்டு வாழ்கின்ற ஒருவரால் இது முடியாத காரியம். இதற்கு நிதியென்பது பாரிய தடையாகவே இருக்கும் என்று நான் நம்புகின்றேன். இதில் பெண்கள் உள் நுழைவதற்கு இந்த பிரசார நிதியென்பது பாரிய சவால்.
?தேர்தல் பெறுபேறுகளில் பெண்ணாக பெற்றுக் கொண்ட படிப்பினைகள்,...
'வென்றால் சரித்திரம், தோற்றால் பாடம்' குறிப்பாகச் சொல்லப் போனால் இதுவரைக்கும் சமூகத்திலும் பாடசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் கற்றுத் தராத ஒரு பாடத்தை இந்த அரசியல் கற்றுத் தந்தது. அதிலிருந்து நாங்கள் தெரிந்துக் கொள்ளக் கூடிய பல்வேறு மனிதர்களை கற்றுத் தர வைத்தது.
பல்வேறுபட்ட சமூகக் குழுக்களை நேரில் அனுகுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதிலும் உண்மையாக அடிமட்ட வசதி வாய்ப்புகள் இல்லாமல் இருக்கின்ற கிராம மக்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. இதிலிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம் என்னவென்றால் அரசியல் வெற்றித் தோல்விகளுக்கப்பால் அடிமட்ட மக்களது வாழ்வாதார சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக வேலை செய்ய வேண்டும் என்ற ஒரு பாடத்தை நான் கற்றுக் கொண்டேன்.
?பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக உங்கள் ஆலோசனை?
புதிதாக தேர்தலில் போட்டியிட விளைகின்ற பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாக என்னால் இருக்க முடியும். அவர்கள் தேர்தல் காலத்தில் போட்டியிடும் போது என்னை அணுகும் பட்சத்தில் அது தொடர்பான ஆலோசனைகளை என்னால் வழங்க முடியும். ஏனென்றால் இதில் கற்றுக் கொண்ட பாடம் என்பது அது மற்றவர்களுக்கு புகட்டக்கூடிய பாடங்கள் பல இருக்கின்றன.
அவற்றை என்னால் செய்ய முடியும். உண்மையில் தேர்தலில் போட்டியிட முன்வருகின்ற எந்தப் பெண்ணுக்கும் நான் ஒரு உந்து சக்தியாக அவர்களுக்கு ஆதரவளிப்பதாக என்னால் செயற்பட முடியும். ஒரு தனி நபராக ஒரு பெண்ணாக என்னால் செய்யக் கூடிய வேலைத்திட்டங்களை என்னால் முன்னெடுக்க முடியும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
23-08.2020 தினகரன்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக