ஆசியாவின் நோபல் பரிசு என்று வர்ணிக்கப்படுகின்ற 'ரெமொன் மகசேசே' விருதைப் பெறும் முதலாவது இலங்கைத் தமிழர் என்ற பெருமையை கெத்ஷி சண்முகம் பெறுகிறார். 82 வயதான இவர் யுத்தப் பாதிப்புக்கு உள்ளானவர்கள், கணவனை இழந்தப் பெண்கள், சிறார்கள் உள்ளிட்டவர்களுக்கு மனவள ஆலோசனைகளை வழங்கிவந்துள்ளார். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்த பணிகளை புரிந்தமைக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதாக, குறித்த விருதை வழங்கும் ஃபிலிப்பின்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இவ் விருது குறித்து அவரிடம் ஓர் உரையாடலுக்கு சென்ற பொழுது எத்தனையோ வேலைகளுக்கு மத்தியிலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கி எவ்வித சலனமும் இன்றி புன்முறுவலுடன் வரவேற்றார். அவருடனான கலந்துரையாடல்....
பொது சேவையில் உங்களுடைய ஈடுபாடு எப்படி ஆரம்பமானது?
நான் பிறந்து வளர்ந்தது கண்டியில். எனது கல்வி வாழ்க்கை கண்டி மோப்ரே பெண்கள் கல்லூரியிலேயே நிறைவுற்றது. நான் படிப்பை முடித்த பின்னர், மோப்ரே பெண்கள் கல்லூரி அதிபர் எங்கள் பாடசாலைக்கு வந்து உதவி செய்யுமாறு என்னை அழைத்தார். அந்நேரம் எனது அம்மா இறந்து விட்டார். நாங்கள் தனியாக இருக்க முடியாது அல்லவா. அப்பாவும் வேலைக்கு சென்று விடுவார். நான் அதே வருடமே பாடசாலையில் ஆசிரியராக வேலை செய்ய ஆரம்பித்து விட்டேன். அதன் பிறகு என்ைன யாழ்ப்பாணத்துக்கு பயிற்சிக்காக அனுப்பி வைத்தார்கள். ஆனால் சிறிது காலம் தான் மோப்ரே கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினேன். அதன் பிறகு சென் ஜோசப் கல்லூரிக்கு வேலைக்கு சென்றேன். அங்கு கடமையாற்றும் போது குழப்படியான பிள்ளைகளை ஒன்று சேர்த்து பாடசாலை முடிந்ததும் அவர்களுக்கு பகுதி நேர வகுப்புக்களை நடத்துவதை கண்ட ஜோசப் பெனடிக் என்ற பாதர், உளவள ஆலோசனை கல்வியை கற்பதற்காக aquanas இற்கு அனுப்பி வைத்தார். பிறகு குடும்ப கல்வி சேவை ஸ்தாபனத்தில் சேர்ந்து அங்கு குடும்ப கல்வி சேவை திட்டம் என்ற பாடத்திட்டத்தை படித்தேன்.
அதை படித்த பிறகு ஜோசப் கல்லூரியில் ஆசிரியராகவும் உளவள ஆலோசகராகவும் ஆகவும் பணியாற்றினேன். அக் காலத்தில் திரும்பவும் என்னை சிறப்பு பயிற்சிக்காக வேலூருக்கு அனுப்பி வைத்தார்கள். அப்பயிற்சியை முடித்தவுடன் 87ஆம் ஆண்டு save the children நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்ததது. அது rebbana என்றொரு நோர்வேஜியன் நிறுவனம். அங்கு வேலை செய்யும் பொழுது எனக்கு முழு பயிற்சி அளிக்க Norway, South Aftica, Nepal, Cambodia ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு நான் அவர்களுக்கு பயிற்சியளித்தது மட்டுமல்லாமல் அவர்களிடமும் நிறைய பயிற்சிகளையும் பெற்றுக் கொண்டேன். அப்போது இலன்டனிலும் children and violence போர்க்கால சூழ்நிலையில் எப்படி தாய்மார்களுடனும் பிள்ளைகளுடனும் வேலை செய்வதென்று அங்கு ஒரு பயிற்சி அளித்தார்கள். அந்த பயிற்சியை வைத்து தான் rebbana என்னை வடக்கு கிழக்கிற்கு அனுப்பினார்கள். கிழக்கில் தான் நான் முதன் முதலில் தாய்மார்களுடன் போர்க்காலச் சூழலில் வேலை செய்தேன். அதாவது பெண்களுக்கு தான் என்னுடைய வேலைகள் சென்றடைந்தது.
முல்லைத் தீவில் ஒரு பாரிய அடிபாடு நடந்து கொண்டிருக்கும் பொழுது கிட்டத்தட்ட 8 மைல்களுக்குள் நான் அங்கு தான் இருக்கின்றேன். இது எனது போர்க்காலச் சூழலில் வேலை செய்த அனுபவம். சுனாமி நேரத்திலும் எனக்கு வேலை செய்த அனுபவம் நிறையவே இருக்கின்றது.
இப்படியான பணிகளில் தடைகள், இடர்பாடுகள் போன்றவற்றை சந்தித்து இருக்கின்றீர்களா எவ்வாறு அவற்றை கடந்து வந்தீர்கள்?
போர் கால சூழ் நிலையில் தடையில்லாமல் இல்லை. அதே நேரத்தில் அது எங்களுக்ெகாரு சவாலாக இருந்தது. போர்க்கால சூழ்நிலையில் ஒரு எதிர்ப்புகள், நாங்கள் இல்லாமல் போய்விடுவோமா என்று நினைத்து கொண்டு போக முடியாது. எங்களுக்குள்ளே ஒரு மன வலு தைரியம் தானே பிறக்கும். அந்த சக்தியோடு தான் நாங்கள் அங்கு நுழைகிறோம் என்று நான் நினைக்கிறேன். எங்களுக்கு எல்லா இடங்களிலும் ஒரு விதமான பாதுகாப்பு கிடைக்கின்றது. அந்த பாதுகாப்பு சாதாரண பாதுகாப்பல்ல. அது ஒரு அற்புதமான தருனம். இரண்டு பக்கங்களிலும் சண்டை நடந்து கொண்டு இருக்கும் போது நாங்கள் வாகனத்தில் போய்க் கொண்டிருக்கின்றோம். எங்களுடைய வாகனத்தில் பாதுகாப்பாக கொடிகள் பறக்கவிட்டு, மின்குமிழ்கள், போன்றன இருக்கும். அப்படியிருந்து சண்டை நடந்து கொண்டிருக்ைகயில் இராணுவமே எங்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். சண்டை முடிந்து நாங்கள் வந்தவுடன் தான் தெரியும் எங்கெங்கு அடிபாடு நடந்தது, எத்தனை பேர் இறந்து போனார்கள் என்று. சில நேரங்களில் நாங்கள் போகும் பொழுது பாதை வழியே சிலர் காயப்பட்டுக் கிடப்பார்கள். ஆனால் எங்களுக்கென்று ஒரு சட்டம் இருக்கின்றது, இந்த வாகனத்துக்ெகன்று சில நிபந்தனைகள் இருக்கின்றது. ஆண்கள், இராணுவத்தினர் அடிபட்டுக் கிடந்தால் நாங்கள் கொண்டு செல்ல முடியாது. காரணம் யுத்தகாலம். பெண்கள், பிள்ளைகளை மட்டும் தான் ஏற்றிக் கொண்டு செல்லலாம். இதை சொல்வது பாதுகாப்பு அமைச்சு. அவர்களின் சட்ட திட்டங்கள் அட்டையாக எங்கள் கையில் இருக்கும். அப்போது பாதையில் சிப்பாய்கள் அடிப்பட்டு அழுது துடித்துக் கொண்டிருக்கும் போது நாங்கள் அவ்வழியில் செல்கையில் அவர்கள் எங்களை நன்றாக திட்டுவார்கள். ‘நீயெல்லாம் ஒரு மனிசியா’ என்று.
போர்க் காலச் சூழலில் இரண்டு பக்கத்துக்கும் சமநிலையில் வேலை செய்வது சுலபமல்ல. ஏனென்றால் பாதுகாப்பு அமைச்சின் சட்டதிட்டங்களையும் பின்பற்ற வேண்டும். இரண்டுக்கும் இல்லாமல் கண்ணையும் காதையும் மூடிக் கொண்டு போவது இலகுவான விடயமல்ல.
ஒரு பெண்ணாக நீங்கள் யுத்தகாலத்தில் வேலை செய்வது உங்களுக்கு பயமாக இருக்கவில்லையா?
பெண் என்பதால் பயம் என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. நான் நினைக்கும் அளவுக்கு பெண்களுக்கு பயத்தை விட தைரியமே அதிகம் இருக்க வேண்டும். எல்லோருக்கும் ரிசிலியன்ஸ் என்றொரு பவர் இருக்கின்றது. எதையுமே நாங்கள் எதிர்கொள்வதற்கு சக்தி உண்டு என்று நான் நினைக்கின்றேன். ரிசிலியன்ஸ் (resilience) பிறக்கும் போது ஒவ்வொரு குழந்தைக்கும் அது இருக்கின்றது. நாங்கள் தான் அவர்களை அடித்து அடித்து அவர்களிடமுள்ள ரிசிலியன்ஸை இல்லாமல் செய்கிறோம். எல்லோருக்கும் அது இருக்கின்றது. அதை நாங்கள் தூண்ட வேண்டி இருக்கின்றது. நான் நினைக்குமளவுக்கு பெண்களுக்கு அது கூடுதலாகவே இருக்கின்றது. பிள்ளை பெற்று வளர்ப்பது ஒரு தாயின் கடமை. அது இலகுவானதல்ல. அதை நாங்கள் சுமை சுமப்பது என்று சொல்கிறோம். சுமை என்பது பாரமாக பிள்ளையை தூக்குவது மட்டுமல்ல. அது சம்பந்தமான முழுமையான நன்நிலை பிள்ளைக்கு கொடுப்பதற்கு அவள் எவ்வளவோ செய்ய வேண்டி இருக்கின்றது. அவ்வளவும் செய்வதற்கு பெண்களுக்கு ஒரு விதமான சக்தி கூடுதலாக இருக்கலாம். அந்த சக்தி தான் என்னையும் அங்கு போக வைத்தது என்று நான் நினைக்கின்றேன். ஏனென்றால் எங்களுக்கென்று ஒரு பொறுப்பு இருக்கின்றது அல்லவா. பெண்களை இப்போது சமூகத்தில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பெண் உரிமை என்று சண்டை போட வேண்டியிருக்கின்றது. பெண்களை எடுத்துக் கொண்டால் வேலைக்கும் செல்கின்றார்கள், வீட்டு வேலையையும் செய்கின்றார்கள்.
உங்களது இந்தப் பணிக்கு தூண்டுகோலாகவும் வழிக்காட்டியாகவும் இருந்தவர்கள் யார் என்று கூற முடியுமா?
தூண்டு கோலாக இருந்தவர் பாதர் ஜோசப் பெனடிக். என்னை இனங்கண்டு பாதர் மோர்வின் பர்னாந்துவிடம் அனுப்பினார். பாதர் மோர்வின் பர்னாந்து தான் எனக்கு கவ்ன்சலர் பயிற்சி கொடுத்தார். ஆனால் இதற்கு முன்னமே எனக்கு தூண்டு கோலாக இருந்தது எனது தாய். நாங்கள் மலையகத்தில் இருந்த பொழுது எனது தாய் அங்குள்ள தோட்டத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய செல்வார். ஆனால் என் அப்பாவுக்கு அது பிடிக்காது. அவர் ஒரு பெரிய தொழில் செய்தபடியால். ஆனால் அம்மாவுக்கு அப்படி இருக்க முடியவில்லை. அம்மா அவர்களை சென்று சந்தித்து உதவிகளை செய்து கொண்டு தான் இருந்தார். ஒரு வேலை அம்மாவுக்குள் இருந்த அந்த சக்தி தான் எனக்குள் இருந்திருக்கும் என்று சொல்லலாம். அதேநேரம் நான் படித்த பாடசாலை மோப்ரே மகளிர் பாடசாலை. அதில் பிரதி அதிபராக தாயம்மாள் டொஸ் என்பவர் இருந்தார். அவர் தான் எனக்கு முன்மாதிரியாக இருந்தார். ஏனென்றால் எனது அம்மா சிறுவயதிலேயே இறந்து போனதால் அவர் தான் எனக்கொரு தாயை போல் இருந்தார். இவர்கள் தான் எனக்கு ஒரு முன்மாதிரி என்று சொல்லலாம். அடுத்ததாக எனது குடும்பத்தில் உள்ளவர்கள் என்னை விட்டுக் கொடுத்தார்கள். அவர்களுக்கு நான் இத்தருணத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன். எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள். இருவருமே அம்மா எங்களை விட்டு விட்டு அங்கும் இங்கும் செல்கிறார் என்று துன்பப்பட்டதுண்டு. இருந்தாலும் எனது கணவரும் அன்றிலிருந்து இன்று வரை எனக்கு உதவியாகவே இருந்தார்.
யுத்தத்தாலும் இயற்கை அனர்த்தத்தாலும் வறுமையாலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீங்கள் பல வழிகளில் உதவியாக இருந்திருக்கின்றீர்கள். இதை பற்றிய உங்களது அனுபவங்கள்?
அனுபவங்கள் என்று சொல்லும் போது அது துன்பகரமான ஓர் அனுபவம் தான். ஆனால் நான் துன்பப்பட்டு அதற்குள்ளேயே புதைந்து போக முடியாது. நாங்கள் ஒரு மன வலிமையுடன் சென்று அவர்களுடைய வேதனைகளை அறிந்து செயற்பட வேண்டும். அதற்கு நாங்கள் சொல்வது (Peer Counseling) கூர்மையான உளவள ஆலோசனை. விதவை தாய்மார்கள் எல்லோரையும் ஒன்றாக சேர்த்தால் அவர்களே அவர்களுக்குள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் அதை திட்டமிட்டு செய்தோம் என்றால் நான் சென்று அவர்களுடன் உரையாட தேவையில்லை. அதைத்தான் நான் நம்பினேன். இந்த தாய்மார்களுக்கு உதவியது அவர்கள் தங்களுக்குள்ளேயே தலைமைத்துவம் செய்தார்கள். தலைவர்கள் என்று சொல்லும் பொழுது அதில் இரண்டு வகையாக இருந்தார்கள். ஒரு குழு நன்றாக பணம் உழைக்க வேண்டும், ஆண்களுக்கு நிகராக மீன் வியாபாரம் செய்ய வேண்டும், சைக்கிள் ஓட வேண்டும் இப்படியான மாற்று சிந்தனை உடையவர்களும் இருக்கின்றார்கள். அதனால் இதில் எனக்கு ஆரம்பத்தில் மனதுக்கு கஸ்டமாக இருந்தாலும் போகப் போக அவர்களுடைய சக்தி வெளியில் வருவதை பார்க்கின்ற பொழுது எனக்கு மிகவும் சந்தோசமாக தான் இருந்தது. இதில் குறைவானவர்கள் என்று நான் யாரையுமே பார்க்கவில்லை. தங்களுக்குள்ளே அமைதியாக அழுது கொண்டிருந்தவர்கள் கூட எழும்பி நடந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அது மட்டுமல்லாமல் அவர்களில் பாலியல் ரீதியான பிரச்சினை இல்லாதவர்கள் இல்ைல என்றும் சொல்ல முடியாது. மறுமணம் செய்தவர்களும் இருக்கின்றார்கள்.
போரில் பாதிக்கப்பட்ட பல தரப்பினர்களில் கூடுதலாக பாதிக்கப்பட்டவர்கள் யார்? பெண்களா அல்லது ஆண்களா?
கணவனை இழந்த பெண்கள் அதாவது பிடிபட்டோ, சூடு பட்டோ அல்லது காணாமலாக்கபட்டோ இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் உடனே அவர்களின் கவலையை வெளிப்படுத்துகிறார்கள். அந்த வடுக்கள் நீண்டநாட்களாக அவர்களுக்குள் இருக்கின்றது. ஆனால் கூடியளவான நேரம் பிள்ளைகளை பராமரிப்பதற்கு செலவிடுவதால் அவர்கள் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு வருகிறார்கள். சில பெண்கள் இரகசியமாக சொல்லியும் இருக்கின்றார்கள் எவ்வளவோ கஸ்டப்படுத்தினார் பாவம் போய் விட்டார் என்று. இவ்வாறான பலர் இருக்கின்றார்கள். ஒரு பகுதியினரை மாத்திரம் சொல்ல முடியாது.
வாழ்க்கையே ஒரு சாவல். அந்த சவால்களுக்குள் நாங்கள் தான் முடிவெடுக்க முடியாது.
பெண்களில் பல தரப்பினர்கள் இருக்கின்றார்கள். இவர்களில் உங்களுக்கு அதிகமான சவால்களை ஏற்படுத்தியவர்கள் யார்?
சவால்கள் என்று சொல்லும் பொழுது நாங்கள் ஓர் ஆய்வு செய்தோம். அடிப்பட்ட போராளிகளை ஓர் இடத்தில் கொண்டு வந்து வைத்திருந்தார்கள். NCP என்னை அங்கு இரகசியமாக அனுப்பி வைத்தார்கள். girl child soldiers அங்கு சென்று நான் அவர்களுடைய கதைகளை சேகரிக்க வேண்டும். அவர்கள் அதில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் பிறகு அதிலிருந்து மீண்டு நல்ல நிலையிலும் இருந்தார்கள். ஆனாலும் மன ரீதியாக அவர்கள் பாதிக்கப்பட்டதை ஒரு உளவள ஆலோசகராக என்னால் இனங்காண முடிந்தது. சில பிரச்சினைகளை பார்க்கும் போது அவை மிகவும் ஆழமாக இருந்தது. அதில் எல்லாவற்றையும் சொல்ல முடியாது. ஒரு பெண் பாலியல் ரீதியாக மிகவும் துன்புறுத்தப்பட்டவர். அவர் வெளிப்படையாக பார்க்கும் பொழுது நன்றாக இருக்கிறார். சிங்களமும் படித்திருக்கிறார். ஆனால் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். இரவில் எழுந்து சுவரை சுரண்டுவார், வலையில் உள்ள ஒவ்வொரு துவாரங்களையும் எண்ணுவார். போய் பார்த்தால் சுவர் எல்லாம் காண் மாதிரி இருக்கும். அவ்வாறு செய்து செய்து நகங்கள் எல்லாம் புண்ணாகியிருந்தது. இந்த கதையை பார்த்து விட்டு வந்த பொழுது நான் மிகவும் வேதனையுடன் அழுதேன். அச் சம்பவத்தை நானே எழுதினேன். ஆனால் அவர் அப்போதும் கூட நல்ல தொழில் செய்து நன்றாகவே இருந்தார்.
என்னைப் பொறுத்தவரையில் எல்லாமே ஒரு சவால். வாழ்க்கை என்பது மேடு பள்ளம். என்னுடைய அனுபவம் என்பது இது ஒரு யாத்திரை. அதில் நான் போய் கொண்டு இருக்கின்றேன்.
விருது பற்றி அறிவித்த போது உங்கள் மனநிலை எப்படியிருந்தது?
விருது பற்றி அறிவித்த போது எனக்கு உடனே அதிர்ச்சியாக தான் இருந்தது. பிலிப்பின்ஸ் நாட்டில் இருந்து கொடுக்கப்படும் விருது அல்லவா. அதை அவர்களிடம் நேரடியாகவே சொன்னேன். இதற்காக நான் அவர்களுக்கு நன்றி கூறவும் கடமைப்பட்டிருக்கின்றேன். இலகுவாக அவர்கள் என்னை தெரிவு செய்யவில்லை. எத்தனையோ இடத்தில் பல பேர்களைைஅவர்கள் நேர்கண்டிருக்கின்றார்கள், இரகசியமாக கேட்டிருக்கின்றார்கள், நேரடியாக சில தொடர்புகளை வைத்திருக்கிறார்கள். இவ்வாறெல்லாம் ஆய்வு செய்து தான் என்னை தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள் என்று தான் நான் நினைக்கின்றேன். இப்படியான ஒரு நிலையில் என்னை தேர்ந்தெடுத்ததை மகிழ்ச்சியாகத் தான் கருதுகிறேன். என்னுடைய வயதுக்கு இது ஒரு ஆச்சரியமான விடயம் என்று என்னால் நினைக்க முடியவில்லை. சில சமயம் விருது கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எனக்கு அந்த உணர்வு ஏற்படலாம் என்றும் எனக்குத் தெரியவில்லை. இதனால் தற்போது ஊடகங்கள் மூலம் சில விடயங்களை சொல்வதற்கு எனக்கு வாய்ப்புக்களையும் வசதிகளையும் கொடுத்திருக்கின்றார்கள். எனது அபிலாசைகளை கொண்டு செல்வதற்கு சிலர் இருக்கின்றார்கள் என்று நினைக்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
நீங்கள் இதுவரைக்கும் ஊடகங்களுக்கு சொல்ல முடியாமல் போன, சொல்ல நினைத்த விடயங்கள் ஏதும் உண்டா?
உண்மை நிலையை அறிவதற்கு ஊடகங்களுக்கு ஒரு சக்தி உண்டு. ஆனால் இப்பொழுது ஊடகங்கள் செய்யக் கூடியது இந் நாட்டினுடைய ஒற்றுமை வளர்ச்சிக்கு (reconsilation) பிரச்சினைகளை கொண்டு செல்லாமல் நாட்டை நடு நிலைக்கு கொண்டு வருவதற்கான சக்தி ஊடகங்களுக்கு இருக்கின்றது என்று நினைக்கின்றேன். ஊடகங்கள் என்று சொல்லும் பொழுது உண்மையை எடுத்துக் காட்டும் ஒரு சக்தி அதற்கு இருக்கின்றது. ஆனால் அது சரியாமல் சமமாக கொண்டு செல்ல வேண்டும் என்றொரு ஆசை எனக்குண்டு.
தினகரன் - 13.08.2017


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக