மலையக மக்கள் முன்னணியின் உயர் பீடத்துக்கு நியமிக்கப்பட்ட மறைந்த அக்கட்சியின் தலைவர் சந்திரசேகரனின் புதல்வி சட்டத்தரணி அனுஷாவுடன் சட்டத்தை தவிர்ந்த ஓர் சமூக சம்பாஷணை.
உங்கள் அரசியல் பிரவேசம் எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது?
என் தந்தை அமரர் பெரியசாமி சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் என்பதை யாவரும் அறிவர். என் தந்தையார் மலையக மக்களின் மீது பேரன்பு கொண்டவர். மலையக சமூகத்தில் அதிக பற்றுக் கொண்டவர். அவர்களின் அடிப்படை தேவைகளையும் பிரச்சினைகளையும் ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை காண்பதிலும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் தன் வாழ்நாள் இலக்காகக் கொண்டு முழு நேர அரசியலில் ஈடுபட்டு வாழ்வையே மலையக மக்களுக்காக அர்ப்பணித்தவர்.
மலையகத்தில் தொழிற்சங்க அரசியலை மாத்திரமே செயற்படுத்தி கொண்டிருந்த மலையக அரசியல்வா திகளில் வேறுபட்ட கொள்கைகளை வகுத்து புதியதொரு மலையகத்தின் எழுச்சிக்காக வித்திட்டவர். தொலைநோக்கு பார்வையுடன் அவர் மலையக மக்களுக்கான செயற்திட்டங்களை மேற்கொண்டிருந்த வேளையில் இறையடி சேர நேர்ந்தது. அவருடைய இழப்பே எனக்குள் பாரிய மாற்றத்தை உண்டு பண்ணியது என்றே கூற வேண்டும். அவருடைய இறுதி சடங்குகளில் கலந்து கொண்டவர்கள் அவரை அண்ணா, மகனே என்று விளித்தது என் மனதை கலங்கச் செய்தது. என் உறவுகளை அனைவரையும் இனங்கண்ட நாள் அன்றைய தினமே. என் தந்தையின் உறவுகளை அன்போடும் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்தும் அவர்களை அரவணைப்பதையே இலக்காக்கினேன். என் தந்தையின் இழப்பின் பின்னரே அவருடைய கொள்கைகளையும் மக்கள் பணியினை மேற்கொள்ள வேண்டும், முன்னெடுக்க வேண்டுமென்ற உத்வேகம் என்னுள் ஏற்பட்டது. என்னுடைய அரசியல் பிரவேசமானது என் தந்தையின் ஆதரவாளர்களுக்கும் எம் மலையக மற்றும் தமிழ் மக்களுக்காகவுமே ஆகும். என் தந்தையின் சேவைகளை, வேலைத் திட்டங்களை அவரைப் போலவே கொள்கைகள் வகுத்து சிறந்த முறையில் கொண்டு நடாத்த வேண்டுமென்பதே என் இலட்சியமாகும்.
மேலும் மலையக பெண்களின் அரசியல் தொழிற்சங்க ஆதிக்கம் வலுவிழந்துள்ள நிலையில் என்னுடைய பிரவேசம் பெண்களை அணிதிரள செய்யவும் மலையக பெண்களின் தேவைகளை ஒரு பெண்ணாக பூர்த்தி செய்யவும் உறுதுணையாக இருக்குமென நம்புகின்றேன். மலையக பெண்கள் முன்பிருந்தே ஒரு கட்டுப்பாடான சூழலில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு மலையக அரசியலில் ஆர்வம் இருக்கின்ற போதும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. வீணான கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து எம் மலையகத்துப் பெண்கள், இளைஞர், யுவதிகள் அனைவருக்கும் என் பிரவேசம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றேன்.
அப்பாவின் அனுபவங்களில் அறிந்து கொண்டவை?
என்னுடைய தந்தை எனக்கு முதன்முதலாக சொல்லிக் கொடுத்த பாடம் அன்பு. என் தந்தை அவரின் ஆதரவாளர்களிடமும் அவரின் கருத்தை ஏற்க மறுத்தவர்களிடமும் அன்புடனேயே நடந்து கொள்வார். அதுவே நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்ட முக்கியமான பாடம். மேலும் என் தந்தை இறக்க இரண்டு நாட்களின் முன் சட்டக்கல்வியின் முக்கியத்துவத்தையும் மலையக மக்களுக்கு சட்டத்துறையினூடாக செயலாற்றக்கூடிய விதம் என்பன குறித்தும் என்னிடம் கலந்துரையாடினார். ஆகவே அவர் இறந்த பின்னர் வைத்தியதுறையில் எனக்கிருந்த நாட்டம் போக சட்டத்துறையில் ஈடுபட வேண்டுமென்ற ஆர்வம் மேலோங்கியது. மேலும் உழைப்பாளர்களை போற்றி மதிக்க வேண்டும் துணிந்தும் உறுதியாகவும் எக்காரியத்தையும் செய்ய வேண்டும். எத்தனைமுறை விழுந்தாலும் எழுந்து நிற்க வேண்டும், மற்றும் நம்மவர்களுக்காக நாமே குரல் கொடுக்க வேண்டும் போன்ற படிப்பினைகளை நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன்.
அம்மா எப்படிப்பட்ட வழிகாட்டியாக உங்கள் அரசியலில் திகழ்கிறார்?
தந்தையின் திடீர் மறைவால் தலைமைத்துவம் இழக்கப்பட்ட கட்சியையும் கொள்கைகளையும் அந்த வீச்சோடு நகர்த்திச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட என் தாயார் குடும்ப சுமைகளுடன் கட்சியையும் பொறுப்பேற்று வைராக்கியத்துடன் அரசியலில் பிரவேசித்தவர். இதேபோல் 1990ம் ஆண்டளவில் என் தந்தை சிறைவாசம் அனுபவித்த போதும் என் தந்தைக்காக மேடைகளில் பிரசாரம் செய்தவர் என் தாயாராவார். பெண்மையில் உள்ள வீரத்தையும் துணிச்சலையும் என் தாயாரிடம் காண்கின்றேன்.
இதுவரை மலையகத்தில் அரசியல் கட்சியின் தலைமைத்துவத்தில் பெண்கள் இருந்ததில்லை. உங்கள் அம்மா மலையக மக்கள் முன்னணியின் தலைமையில் இருந்த வரை சாதித்தது என்ன?
நீங்கள் கூறியது போலவே மலையக அரசியல் கட்சிகளில் பெண் தலைமைத்துவத்தை என் அம்மாவே முதன்முதலாக வகித்தார். கணவனை இழந்த பெண் நிறைய இன்னல்களை சந்திப்பது வழக்கமாகும். மேலும் குடும்பச் சுமையும் அவருக்கு தடையாக இருந்தது.
இத்தகைய பல இன்னல்களுக்கும் குடும்பச் சுமைகளுக்கும் மத்தியில் கட்சியின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பல்வேறுபட்ட சிக்கல்களை எதிர் கொண்டார். இருப்பினும் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் நம்பிக்கையூட்டி வழிநடாத்தினார். ஜனாதிபதி ஆலோசகராக பல வேலைத் திட்டங்களையும் மேற்கொண்டார். மலையக மக்கள் முன்னணி எழுச்சிப் பாதையிலேயே சென்று கொண்டிருப்பதற்கு என் தாயாரின் பங்களிப்பும் பாரியதாகும்.
சட்டம் கற்ற நீங்கள் கட்சி சார்பில் இன்றைய புதிய அரசியல் யாப்பில் மலையகத்துக்கான குறிப்பாக மலையகப் பெண்களின் முன்னேற்றம் குறித்த அம்சங்கள் எவற்றை முன்மொழிந்தீர்கள்?
புதிய அரசியலமைப்பு குறித்த முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. மலையக மக்களினது அடிப்படை உரிமைகளை அரசியலமைப்பில் உள்ளடக்குமாறு பல்வேறு கோரிக்கைகளை பலரும் முன்வைத்துள்ளனர். பெரும்பாலானவை நியாயமான
அவசியமான கோரிக்கைகளாகவே உள்ளன. பெண்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இவ்வரசியலமைப்பு அமைய வேண்டும் என்பது என் கோரிக்கையாகும்.
ஒரு வழக்கறிஞராக மலையக சமூகத்துக்கு எத்தகைய பணியினை முன்னெடுக்க உள்ளீர்கள்?
ஒரு வழக்கறிஞராக எவ்வித பிரச்சினைகளுக்கும் சட்டத்தின் உதவியை அணுக முடியுமென எண்ணுகிறேன். ஒரு நாட்டின் பிரஜைகள் சட்டத்தினாலேயே ஆளப்படுகின்றார்கள். உரிமைகள் தொடர்பான முரண்பாடுகள் சட்டத்தினாலேயே தீர்க்கப்படுகின்றது. ஜனநாயகத்தை கருத்தில் கொண்டு பக்கச்சார்பற்ற நீதியை வழங்குவது சட்டத்தின் பணியாகும். நாட்டில் நீதித்துறையின் பங்கு இன்றியமையாததாகும். எம் மக்களின் அடிப்படை உரிமைகள், இன்னல்கள், உரிமை மீறல்கள் போன்றவற்றை சட்டத்தினால் சீர்படுத்தும் பணியினை முன்னெடுக்க உள்ளேன். நிச்சயமாக மலையக மக்களுக்கு பயனுள்ள வகையில் சட்டக் கல்வியை பயன்படுத்துவேன்.
என் தந்தையின் புதிய மலையகத்திற்கான கனவை நனவாக்க உங்கள் அனைவரினதும் ஆதரவும் அன்பும் என்னென்றும் எனக்கு உறுதுணையாக இருக்கும் என முழுமையாக நம்புகின்றேன்.
தினகரன் - 19.02.2017


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக