2020 பொதுத் தேர்தல் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீழ்ச்சி
ஒரு நோக்கு
மாச்சந்திரா பிரகாஷ் நாடறிந்த சிரேஷ்ட ஊடகவியலாளர். 2018 தொடக்கம் அரசியலில் ஈடுபடும் இவர், கொழும்பு மாநகர சபை உறுப்பினராகவும் மேல் மாகாண சபை முதலமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளராகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராகவும் செயற்பட்டு, நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டவர். நடந்து முடிந்த தேர்தலில் இழக்கப்பட்ட பெண் பிரதிநிதித்துவம் மற்றும் அது தொடர்பான காரண காரியங்கள், நடைமுறை அரசியல் நிலைமைகள் தொடர்பில் மீண்டெழுவுக்கு வழங்கிய கலந்துரையாடலில்,....
?பாராளுமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், பெண்களின் வெற்றி மேலும் பலவீனப்பட்டிருக்கிறதே என்ன காரணம்?
இலங்கை சனத்தொகையில் 52% இற்கும் அதிகமான பெரும்பான்மையைக் கொண்ட பெண்கள் தங்கள் வாக்குகளை அதிகமாக ஆண்களுக்கே வழங்கியுள்ளார்கள். வாக்களிப்பு என்பது ஒருவரின் ஜனநாயக உரிமை. அதை நாம் மதிக்கிறோம். ஆயினும் தாங்கள் வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பும் ஆண்கள், பெண்கள் உரிமை சார்ந்தும், பெண்களின் அடிப்படை விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவார்களா? என்பதை ஒவ்வொரு பெண்ணும் உணர வேண்டும். அத்துடன் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில், இம்முறை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ‘அவளுக்கு ஒரு வாக்கு’ செல்வாக்கு செலுத்தியிருந்தாலும், அதனால் பெரிய மாற்றத்தை பெண்கள் மத்தியில் கொண்டுவர முடியவில்லை.
?நீங்கள் சார்ந்த கட்சியில் பெண்களை அரசியலுக்கு கொண்டு வருவதற்கான தனியான வேலைத்திட்டம் உண்டா? நீங்கள் அதில் திருப்திபடுகிறீர்களா?
இலங்கையில் உள்ள தேசியக் கட்சிகளின் கட்டமைப்பைப் பொறுத்த வரையில், ஏனைய கட்சிகளை விட பெண்கள் அணி வலுவூட்டப்பட்டதாக இருப்பது வழமை ஆகும். அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் ‘ஐக்கிய பெண்கள் சக்தி’ ஊடாக பெண்களுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக பெண்களை அரசியலுக்கு கொண்டு வருவதற்கான தனியான வேலைத்திட்டங்கள் சிலவற்றை நாம் முன்னெடுத்து வருகிறோம். ஆயினும் தமிழ் பேசும் பெண்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்கும் அரசியலுக்குமான இடைவெளி மிக அதிகமாக உள்ளது. ஆகவே ஐக்கிய மக்கள் சக்தியின் ‘ஐக்கிய பெண்கள் சக்தி’ ஊடாக தமிழ் பேசும் பெண்களின் வகிபாகத்தை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்க எண்ணியுள்ளேன்.
?அரசியலில் பங்குபற்றுவதில் தமிழ்ப் பெண்களுக்கு பிரத்தியேக சிக்கல்கள் இருப்பதாக நினைக்கிறீர்களா?அது தொடர்பான உங்கள் கருத்து.
கலாசார ரீதியான விடயங்கள் அவற்றுள் முக்கியமானவையாகும். தமிழ் - முஸ்லிம் பெண்களைப் பொறுத்த வரையில், ஆரம்ப காலங்களில் இருந்த வாழ்வியலுக்கும் தற்போது உள்ள வாழ்வியலுக்கும் இடையில் கல்வி மூலமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. எவ்வளவு படித்தால் என்ன? படிக்காவிட்டால் என்ன? திருமணம், குடும்பம் மற்றும் குழந்தை என்றிருந்த தமிழ் பேசும் பெண்களின் நிலைமை தற்போது மாற்றம் அடைந்துள்ளது. குடும்பப் பொறுப்புக்களுடன் பல்துறை ஆளுமை மிக்கவர்களாக அவர்கள் விளங்குகிறார்கள். ஆயினும் பல்துறைகளில் உள்ள உயரிய ஆசனங்களை அலங்கரிக்கும் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு மாத்திரம் தயக்கம் காட்டுகிறார்கள். அதற்கான காரணங்கள் பல உள்ளன. இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இலஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, அடிதடி மற்றும் இன்னோரன்ன பல விடயங்களை முக்கியமாகப் பார்க்கலாம்.
?பெண் வாக்காளர்களின் வாக்களிப்பதற்கான விருப்பம் குறைந்ததற்கான காரணம்?
பெண் வாக்காளர்களிடம் மாத்திரம் அல்ல, ஆண் வாக்காளர்களிடமும் வாக்களிப்பதற்கான ஆர்வம் குறைந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணம், வாக்களிப்பதால் என்ன நடந்து விடப்போகிறது என்ற சலிப்புத்தன்மையே ஆகும்.
?இத்தேர்தலில் பெண்ணாக நீங்கள் எதிர்கொண்ட சாவால்கள் எவை?
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், அனைத்து வேட்பாளர்களைப் போன்று பல சவால்களுக்கு நான் முகம் கொடுத்தேன். மேலதிகமாக பெண் வேட்பாளர்கள் பல சவால்களை சந்தித்தனர். அதிலும் தமிழ் பேசும் பெண்களுக்கு கலாசார வளர்ப்புடன் கூடிய பல சவால்கள் ஏற்பட்டன. அவ்வாறான பல சவால்கள் எனக்கு கட்சிக்குள்ளிருந்தும் வெளியில் இருந்தும் ஏற்பட்டன. உதாரணமாக, கூட்டங்களில் கட்சித் தலைவருக்கு அருகில் அமர்வது கூட விமர்சனக் கண்களோடு பார்க்கப்பட்டது. மொத்தத்தில் ‘அரசியலில் பெண்களுக்கான சவால்கள்’ என்னும் தலைப்பில் ஒரு நூல் எழுதலாம். ஆயினும் கட்சித் தலைவரின் தொலைநோக்கு சிந்தனையும் குடும்பத்தினரின் அனுசரணையும் தேர்தல் காட்டாற்றில் நின்று பிடிப்பதற்கு உதவி புரிந்தன.
?தேர்தல் முடிவுகளில் இருந்து பெண்ணாக நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?
ஒரே ஒரு விடயம்தான். மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்படுகிறதோ இல்லையோ வெற்றி - தோல்விக்கு அப்பால் எனது அரசியல் பயணம் தொடரும். அதை இந்த தேர்தல் இன்னும் உறுதிப்படுத்தியுள்ளது.
?நீங்கள் வெற்றிபெறாத சூழலில் தேர்தலுக்குப் பின்னர் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று, ஐக்கிய மக்கள் சக்தியின் ‘ஐக்கிய பெண்கள் சக்தி’ ஊடாக தமிழ் பேசும் பெண்களின் வகிபாகத்தை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்க எண்ணியுள்ளேன். மேலதிகமாக கட்சி வரம்புகளுக்கு அப்பால் பெண்களின் அரசியல் வகிபாகத்திற்கு என்னால் முடிந்த வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன்.
?நீங்கள் வெற்றி அடைந்திருந்தால் இந்த நிலைமையை மாற்றுவதில் எத்தகைய வேலைத்திட்டத்தை முன்னிருத்தியிருப்பீர்கள்?
வெற்றி - தோல்விக்கு அப்பால் பெண்களின் அரசியல் வகிபாகத்திற்கு என்னால் முடிந்த வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன். ஆயினும் வெற்றி பெற்றிருந்தால், சட்டங்கள் இயற்றப்படும் பாராளுமன்றத்தில் இருந்து பெண்களுக்கான அரசியல் வகிபாகத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களை முன்னெடுத்திருப்பேன்.
?பெண்கள் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்.உங்கள் கண்ணோட்டத்தில்,...
பெண்களின் பிரச்சினைகளை பெண்களே நன்கறிந்தவர்கள். மேலதிகமாக ஆண் - பெண் சமத்துவம் கொண்ட அரசியல் என்பது சம எடை கொண்ட தராசு போன்றது. ஆகவே நடுநிலைமை கொண்ட ஆட்சி இடம்பெற வேண்டும் என்றால், ஏனைய துறைகளைப் போன்று பெண்கள் வகிபாகம் அரசியலில் அதிகரிக்கப்பட வேண்டும்.


Casinos & Sportsbook - DrMCD
பதிலளிநீக்கு› 오산 출장마사지 casinos › sportsbook-guide › 창원 출장샵 casinos › sportsbook-guide 인천광역 출장샵 Get 포항 출장샵 the latest on the biggest games, odds and lines of every major 김천 출장샵 sport around, from NFL to NBA, NHL and College Basketball.