செவ்வாய், 8 செப்டம்பர், 2020

பெண்கள் எதையும் கெஞ்சிப்பெற வேண்டியதில்லை - பேரியல் அஷ்ரப்


பேரியல் அஷ்ரப் என்ற பெண் ஆளுமையை யாரும்  மறந்திருக்கமாட்டார்கள். இவர் பல அமைச்சு  பதவிகளை வகித்தவர். சிறுபான்மையினரின்  பெண் தலைமைத்துவத்தின் முன்னோடி எனலாம்.  நாம் அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு எங்களுக்கு ஒரு நேர்காணலுக்கான நேரத்தை   துக்கி தருமாறு கேட்டோம். நான் என்ன சொல்லப்போகிறேன், ஓய்வில் இருக்கும் என்னிடம் எதைப்பற்றி கலந்துரையாடுவது என்று மறுத்தார்.  எமது விடாப்பிடியால் ஒப்புக்கொண்ட அவர் தனது இல்லத்திற்கு வருமாறு அழைப்பு  விடுத்தார். நாம் அங்கு சென்றவேளை அரசியலை தவிர்த்து பெண்ணியம் தொடர்பான ஓர் ஆழ்ந்த சம்பாஷனையின் போது அவரின் கருத்துக்கள் சில...
உங்களது அரசியல் பிரவேசமும் பின்னணியும்?
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எமது வீட்டிலேயே ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் எமது வீட்டிலேயே கட்சியின் சகல நடவடிக்கைகளும் நடந்தன. அப்போது அங்கு வரும் உறுப்பினர்களுக்கு தேனீர், சமையல் செய்து  கொடுப்பது என் வேலை.  வீட்டில்  மனைவிக்கு என்றொரு இடம் ஒதுக்கப்படும். அதற்குரிய கடமையையே நானும் செய்தேன். கட்சி பெரும் விருட்சமாக வளர்ந்து இருக்கும்போது என் கணவரின் திடீர் மறைவால் கட்சியில் உள்ளவர்கள் அடுத்து என்ன செய்வது என்று  திண்டாடினர். அப்போது கட்சியில் இருந்த சில உறுப்பினர்கள் என்னை தற்காலிகமாக தலைமை பதவிக்கு நியமிக்க தீர்மானித்தனர். அவ்வேளையில், அதில் சில உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்ணுக்கு  எப்படி தலைமையை வழங்குவது, எங்களில் யாரும் இல்லையா? என ஒரு குழு பிரிவினையை ஏற்படுத்தியது. அப்பிரிவினையில் என்னை விரும்பியவர்கள் எனக்கு கட்டாயம் தலைமையை வழங்க வேண்டும் என்ற கடைசி தீர்மானத்திலேயே எனக்கு வழங்கப்பட்டது. ஆகவே என் அரசியல் பிரவேசமே ஒரு சாராரின் எதிர்ப்பிலேயே ஆரம்பமானது. பேரியல் அஷ்ரப் என்ற பெண்ணை நம்பி, இவளால் முடியும் என்ற நல்லெண்ணத்தில் இந்தப் பொறுப்பு தரப்பட்டவில்லை என்று நான் நினைக்கிறேன். அத்தோடு எமது நாட்டில் இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைக்கு நிறைய முன்னுதாரணம் இருக்கின்றன.

பண்டார நாயக்கவின் மறைவின் பின்னர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் தலைமை சிறந்ததாக அமைந்தது. ஆனால் அவரின் பிரவேசம் கட்சியின் அனைவரின் விருப்பத்துடன் நடைபெற்றது. என் பிரவேசம் அவ்வாறான நிலைமையை ஏற்படுத்தவில்லையெனலாம். 
பெண் தலைமைத்துவம் தொடர்பான உங்களின் நிலைப்பாடு?
பெண் தலைமைத்துவம் ஏற்றுக்ெகாள்ளப்படாத ஒரு பேசு பொருளாகவே இருக்கின்றன. ஒரு பெண்ணுக்கு தலைமைத்துவத்தை வழங்குவோம், இவளால் செய்ய முடியும் திறமைசாலி என்ற எண்ணப்பாடு இன்னும் ஆண்கள் மத்தியில் மட்டுமல்ல சில பெண்களின் மனதில் கூட இல்லை. இதுவே யதார்த்தமாகும். நாம் உலகத்துக்கு முதல் பெண் பிரதமரை அறிமுகப்படுத்தியுள்ளோம். ஆனால் அதன் பிற்பாடு யாரும் வரவில்லை. சந்திரிகா அழைத்து வரப்பட்டார் ஏன்? சுதந்திரக் கட்சி அதல பாதாளத்தில் இருந்த போது கட்சியில் உள்ளவர்கள் கட்சியின் முன்னேற்றத்திற்கு அவரின் தலைமைத்துவம் தேவைப்பட்டது. அதேபோல், தமிழ் தரப்பிலும் யாருமில்லை. ஆகையால் முஸ்லிம் தரப்பில் நான் வந்தது மிகப்பெரிய விடயமாக கருதவேண்டியுள்ளது. அதுவும் பத்து வருடங்களாக அரசியலில் நிலைத்து நின்றதும் எமது மக்களின் முழுமையான ஆதரவால் மட்டுமல்ல எனலாம். நான் பெண் என்பதாலே என்னவோ என் தலைமையை முழுமையாக அங்கீகரிக்கவில்லை. 
பெண் அரசியல் பிரதிநிதித்துவத்தின் அவசியம் என்ன? ஏன்? எதற்காக? நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
தற்போது பெண் பிரதிநிதித்துவம் பற்றி பல கலந்துரையாடல்கள், பயிற்சி பட்டறைகள் நடத்தப்படுகின்றன. பெண்களுக்கு 25% பங்களிப்பு வழங்க வேண்டும். நாம் கேட்கும்போது நாங்கள் இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுகிறோம். ஏனென்றால், நாம் ஒருவரிடம் ஏதாவது தாருங்கள் என்று கேட்கும் போது அவருக்கு கீழ்படிந்து தான் ஆக வேண்டும் என்ற ஒரு நியதி. அந்நிலையில், எங்கள் மனதில் இருக்கும் தைரியமும் சிறிது குறைந்தது போல் ஓர் உணர்வு. நீங்கள் 100 வீதம் வைத்திருக்கிறீர்கள் எங்களுக்கு 25வீதம் தாருங்கள் என்று இறைஞ்சுவது போல் இருக்கிறது. இது எமது உரிமை. 100வீதத்தில்  அரைப் பாதி எங்களுடையது. அதை நாம் எடுக்க முயற்சிக்க வேண்டும். அதற்கான நடைமுறை சாத்தியமான விடயங்களை ஆராயவேண்டும். எங்களுக்கு 25% பிரதிநிதித்துவம் தாருங்கள் என்று கேட்டால் தருகிறோம், பட்டியலில் போடுகிறேன் வெற்றிபெற்று வாருங்கள் என்பர். அப்போது எங்களுக்கு வாக்களிப்பார்களா? இல்லை. புதிய பெண் பிரதிநிதிகளுக்கு வாக்களிக்கமாட்டார்கள். இதில் விசேடத்துவம் என்னவென்றால் பெண்களே பெண்களை விரும்புவதில்லை. இவளுக்கென்ன வேலை வீட்டில் இருக்கும் வேலைகளை விட்டு விட்டு இவளுக்குத் அரசியல் தேவை தானா என்பார்கள்.
ஒரு முஸ்லிம் பெண் தலைவி என்ற வகையில் முஸ்லிம் பெண்களின் அரசியல் பிரவேசத்தை அதிகரிக்க ​நீங்கள் கூறும் அறிவுரை? 
முதலில் பெண்ணின் அருமை பெருமையை அவளுக்கு எடுத்துரைக்க வேண்டும். இயற்கையிலே யே பெண்கள் திறமைசாளிகள். அது கடவுள் தந்த வரமாகும். அவள் செய்யும் சேவையின், வீட்டு முகாமைத்துவத்தின் திறமையை அதன் தாற்பரியத்தை விளங்கப்படுத்த வேண்டும். வீட்டின் முகாமைத்துவத்தை நடத்தும் நீ, நாட்டின் முகாமைக்கு உன் பங்களிப்பு என்ன? நாட்டின் நிதி முகாமைத்துவத்தில்  எவ்வாறு நீ பங்களிப்பு செய்ய முடியும் என்பதை சாதாரண பெண்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். நான் படியாதவள் எனக்கு என்ன தெரியும் என்று புலம்பும் பெண்ணின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். வீட்டின் கணவர் தரும் பணத்தில் குடும்ப உறுப்பினர்களின் அனைத்து தேவைகளையும் செய்யும் நீ வீட்டு முகாமைத்துவத்தின் முகாமையாளர். ஒவ்வொரு ஆணுக்கும் தெரியும் தன் மனைவி அவனை விட திறமைசாலி என்று. அந்த பயம் ஆண்களிடம் இருக்கிறது. நாங்கள் ஏன் அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற தகவல் சாதாரண பெண்களிடம் சென்றடையவில்லை. அவள் செய்யும் தொழிலின் தாற்பரியம், முக்கியத்துவம் அவளுக்கு விளங்கப்படுத்தப்படவில்லை. நாம் இரண்டாம் பட்சமாக நின்று உரிமைகளை கேட்பதை விட்டு விட்டு எமது பங்கை நாம் அனுபவிக்க வேண்டும். அப்போது தானாக பெண்களின் மனதில் மாற்றம் நிலவும். 
உங்கள் பார்வையில் ஆண் பெண் சமத்துவம் எவ்வாறு பேணப்படுகிறது?
இதில் கூட ஆணுக்கே முதலிடம் கொடுக்கப்படுகிறது. இவ் வாக்கியத்திலேயே பெண்ணுக்கு சமத்துவம் அற்றுப்போயுள்ளது. சகல துறைகளிலும் ஒரு பெண்ணை தவறாக நோக்கும் எண்ணக்கருவில் மாற்றம் ஏற்படவில்லை. சில சந்தர்ப்பங்களில் பெண்கள் மிகவும் கீழ்த்தரமாக நோக்கப்படுகிறார்கள். ஏதோ ஒரு பிழையான சம்பவத்தை கண்டால் இவள் என்று தொடங்கி இல்லாத பொல்லாததெல்லாம் கதைப்பார்கள். அதன் உண்மைத் தன்மையை அறிய முற்படுவதில்லை. அவள் ஏன் அப்படி செய்தாள் எதற்காக என்ன காரணத்துக்காக இதை செய்கிறாள் என்று எண்ணுவதை விட்டு விட்டு, வசைபாட தொடங்கிவிடுவார்கள். முதலில் அவளும் ஒரு மனிதப் பிறவி என்று ஏற்றுக் கொள்ளுங்கள். அவள் உன்னுள் ஒருவர் என்ற மனித மனப்பான்மை மதிக்கப்பட வேண்டும். அப்போது தான் பெண்ணின் இயற்கையான மென்மைக்கு இடம் கிடைக்கும்.

தினகரன் - 04.06.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக