ஒரு சமூகத்தின் உயர்ச்சியை கல்வி கற்றவர்களின் விகிதாசாரமே எடுத்துக் காட்டும் காரணியாகும். ஒரு காலத்தில் பெண்களுக்கு கல்வி கற்பதற்கு கூட உரிமை மறுக்கப்பட்டது. அதை மீறி கற்றாலும் தொழில் செய்வதற்கு தடை போடும் பெற்றோர்கள். இவற்றையெல்லாம் தாண்டி கற்ற கல்வியால் தன் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டு போராடிய பெண்மணியே ஷம்ஸூன் நஹார் ஜெமீல் மரிக்கார் ஆவார். இவர் பேருவளையின் முதல் பெண் ஆசிரியரும் பிரதி அதிபருமாவார். 1958ம் ஆண்டு முதல் பெண் ஆசிரியராக நியமனம் பெற்றுக் கொண்டவர். தான் விண்ணப்பித்த ஆசிரியர் நியமனம் தனக்கு வழங்கப்படவில்லை என்று அன்று அவர் முன்னெடுத்த செயற்பாட்டால் படித்த இளைஞர், யுவதிகளுக்கு அந்தந்த ஊர்களிலேயே ஆசிரியர் நியமனம் வழங்கப்பட வேண்டுமென அப்போதைய கல்வி அமைச்சரான தஹநாயக்க வழங்கிய பணிப்பு இன்று ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அதற்கான முன்னெடுப்புகளை செய்த ஷம்ஸூன் நஹார் ஜெமீல் மரிக்காரையும் அறிந்திருக்கமாட்டார்கள். நாம் அவரை அவரது வீட்டில் சந்தித்து போராட்டத்தின் சில பக்கங்களை 'மீண்டெழு' பக்கத்துக்காக மீட்டிப் பார்த்தோம்.
கேள்வி : பேருவளையில் முதல் ஆங்கில ஆசிரியரான நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமான சம்பவம் மற்றும் தோல்விகளை பற்றி?
வெற்றி என்றால் எனக்கு கிடைத்த முதல் ஆசிரியர் நியமனம் தான். ஆனால் நான் அதற்காக விண்ணப்பித்த போது எனக்கு தகுதியிருந்தும் யாழ்ப்பாணத்திலுள்ள ஒருவருக்கு வழங்கியது என் மனதை தோல்வியில் துவள வைத்தது. பின்னர் அது பெரும் போராட்டமாகவும் உருவெடுத்தது. எனது அண்ணா சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவருக்கு இந்த விடயம் மிகவும் கவலையையும் அவர் மனதை பாதிப்படையவும் செய்தது. ஏனென்றால் தகுதிகள் இருந்தும் அப்பதவி எனக்குக் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம்.
பிறகு என் அண்ணா அவருடன் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த வெளிமடை தொகுதி எம்.பியாக இருந்த கே.எம்.டி இராஜரட்ணவிடம் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் பண்டாரநாயக்கவின் அமைச்சரவையில் ஜூனியர் அமைச்சராகவும் இருந்தவர். அப்போது அவர் எங்களை அமைச்சர் தஹநாயக்கவிடம் அழைத்துச் சென்றார். தஹநாயக்கவிடம் சென்று இவ் விடயமாக பேசும் போது சாய்வாக அமர்ந்திருந்தவர் நிமிர்ந்து ஆச்சரியத்துடன் எங்கள் பிரச்சினையை செவி மடுத்தார். அக்கணமே கல்விப் பணிப்பாளருடன் தொடர்புகொண்டு 'அந்த பெண் கேட்ட அந் நியமனத்துக்கு இன்றே அவரை நியமிக்கவும்' என்று கூறியுள்ளார். அத்தோடு யாழ்ப்பாணத்திலிருந்து வந்த ஆசிரியரை அவரின் ஊருக்கே மாற்றுமாறும் பணிப்பித்துள்ளார். அதே நாள் ஒரு முக்கியமான திருப்பு முனையும் ஏற்பட்டது. அந்தந்த ஊர்களில் படித்து முடித்த முஸ்லிம் பிள்ளைகளுக்கு அவ் ஊர் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களுக்கு நியமனம் வழங்குமாறும் ஓர் பணிப்புரையை வழங்கினார். இது முஸ்லிம்களுக்கு தஹாநாயக்க செய்த பெரும் சேவையாகும்.
இது என்னால் படித்த முஸ்லிம் பிள்ளைகளுக்கு கிடைத்த பெரும் சேவையாகவும் அர்ப்பணிப்பாகவும் கருதுகிறேன். இதனால் அக்காலத்தில் படித்த முஸ்லிம் இளைஞர், யுவதிகளுக்கு அந்ததந்த ஊர்களிலேயே ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. ஆனால் அப்போது இருந்த முஸ்லிம் அமைச்சர்கள் அதை எதிர்த்தனர். ஏனென்றால் பயிற்றப்படாத ஆசிரியர்களை நியமிப்பதால் பாடசாலையின் கல்வித் தரம் குறையும் என்று கூறினர். ஆனால் அது நடக்கவில்லை.
கேள்வி: உங்களின் பள்ளி வாழ்க்கை பற்றி...?
அக்காலத்தில் பேருவளையில் ஒரு பெண்கள் பாடசாலை மாத்திரமே இருந்தது. அதுவும் தரம் 5 வரை தான். ஏனென்றால் பெண்கள் பூப்பெய்திய பின்னர் பெற்றோர்கள் குறிப்பாக முஸ்லிம் பெண்களை பாடசாலைக்கு அனுமதிக்காது இடையிலேயே நிறுத்திவிடுவார்கள். அதன் பின்னர் 1947ல் ஒரு ஆங்கில பாடசாலை சைனாபோட் ஜுனியர் ஸ்கூல் ஆரம்பிக்கப்பட்டது. அதிலும் தரம் எட்டு வரை மட்டுமே இருந்தது. 8ம் தரம் வரும் போது நிறைய பெண் பிள்ளைகள் விலகி சென்று விட்டனர். தரம் எட்டில் நான் மட்டுமே ஒரே ஒரு பெண் பிள்ளை. அதுவும் நான் பூப்பெய்துவதற்கு காலம் சென்றதால் எனக்கு கிடைத்த சந்தர்ப்பம் எனலாம். ஆனால் அந்த பாடசாலையில் தரம் 8 வரை தான் இருந்தது. நான் நன்றாக படிப்பதால் எனது அம்மா அப்பாவிடம், மகள் நன்றாக படிக்கிறாள், அதனால் தொடர்ந்தும் படிக்க விடுவோம் என்று சொன்ன பிறகு அப்பா என்னை தர்கா டவுனில் உள்ள பாடசாலையில் சேர்த்தார். நான் அங்கு படித்து ஆங்கில மொழியில் எஸ்.எஸ்.சி. (அக்காலத்தில் க.பொ.த. சாதாரண தரம்) பரீட்சை எழுதி சித்தியடைந்தேன். பேருவளையில் பொது பரீட்சை ஒன்றில் சித்தியடைந்த முதல் பெண் பிள்ளை என்ற பெருமையும் அக்காலத்தில் எனக்கு கிடைத்தது.
இவ்வளவு படித்ததும் தொழில் செய்வதற்காக அல்ல. அக்காலத்தில் பெண்கள் அதுவும் முஸ்லிம் பெண்களை வேலைக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் பயம். அதுவும் என் அம்மா விருப்பமில்லை. அதன் பிறகு சைனாபோட் ஜூனியர் பாடசாலையிலிருந்து ஒரு ஆங்கில ஆசிரியருக்கான வெற்றிடம் உள்ளது என்று அறிவித்தனர். அக்காலத்தில் பரீட்சைகள் ஒன்றும் கிடையாது. ஒவ்வொன்றாக தான் நியமனங்கள் வழங்கப்படும். எனக்காக ஒரு விண்ணப்பப்படிவத்தை என் அண்ணா சட்டக் கல்லூரி மாணவன் ஏ.ஜே.எம்.டஸூரிடம் கொடுத்தார். அவர் அதை கொம்பனிதெருவிலுள்ள கல்வி திணைக்களத்தில் பதிவு செய்தார். ஆனால் அந்நியமனம் எனக்கு கிடைக்காமல் யாழ்ப்பாணத்திலுள்ள ஒருவருக்ேக வழங்கப்பட்டது.
கேள்வி: உங்கள் ஆசிரியர் பணி செய்யும் காலத்தில் நடந்த சம்பவங்கள்?
நான் ஆங்கில ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது 1958ம் ஆண்டு பயிற்சிக்காக கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு சென்றேன். அதன் பிறகு சைனாபோட் கீழ்நிலை பள்ளி மழைக்கு உடைந்து விட்டது. பின்னர் அல்-ஹுமைசரா ஆண்கள் பாடசாலையில் பகல் நேர வகுப்புகள் பெண்களுக்காக நடத்தப்பட்டது. அதன் பிறகு அக் காணி ஆண்கள் பாடசாலைக்கு வழங்கப்பட்டது. அக்காலத்தில் களுத்துறை தொகுதி எம்.பியாக இருந்த சம்லி குணவர்தன தான் பெண்கள் பாடசாலையை மீள கட்டியெழுப்பினார். அதற்கான காணியை சாலிஹாஜியார் வழங்கினார். எனது பயிற்சி முடிய மீண்டும் 1959ம் ஆண்டு அதே பெண்கள் பாடசாலைக்கு எனக்கு நியமனம் கிடைத்தது. நான் வந்த பிறகு படிப்படியாக 7ம் வகுப்பில் தொடங்கி க.பொ.த. சாதாரண தரம் வரை அப் பாடசாலை வளர்ந்து சென்றது. 1962 ம் ஆண்டு க.பொ.த (உயர்தர) பரீட்சைக்கு 5 பிள்ளைகள் தோற்றினார்கள். அதில் 4 பெண்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவானார்கள். அதில் என் மகளும் இருந்தாள். எமது பாடசாலை படிப்படியாக வளர்ச்சியடைந்தாலும் அந்த காலத்தில் பாடசாலைக்கு சிற்றூழியரோ, பாதுகாப்பு உத்தியோகத்தரோ இல்லை எல்லா வேலைகளையும் ஆசிரியர்களே செய்து கொள்ள வேண்டும்.
கேள்வி: பொது பணித்துறையில் உங்கள் ஈடுபாடு?
1976ம் ஆண்டு சைனாபோட் பெண்கள் எல்லோரும் சேர்ந்து 'சைனாபோட் முன்னேற்ற பெண்கள் அமைப்பை' ஆரம்பித்தோம். அதில் நான்தான் தலைவியாக செயற்பட்டேன். அப்போது எமது பெண்கள் பாடசாலைக்கு இடவசதி போதவில்லை. நான் எங்கள் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளை அழைத்து கலந்துரையாடினேன். அப்போது எல்லோரும் பணம் சேர்த்து இருமாடி கட்டிடத்தை கட்டி கொடுக்க தீர்மானித்தோம். அக்காலத்தில் இரு மாடிக் கட்டிடங்களை கட்டுவதற்கு 5,000 ரூபா இருந்தாலும் போதும். அப்போது பணமும் சேகரிக்கப்பட்டது. கட்டிடத்திற்கான மாதிரி வரைப்படத்தை நானே வடிவமைத்து கல்வி திணைக்களத்துக்கு அனுமதி பெற அனுப்பி வைத்தேன். கல்வி திணைக்களத்திலுள்ள வடிவமைப்பாளரும் அதில் சிறு மாற்றங்களை செய்து அதற்கான அனுமதியும் வழங்கியிருந்தார். சைனாபோட் வை.எம்.எம்.ஏ. தாங்கள் அதை செய்வதாக பொறுப்பேற்றது. இன்று இருக்கும் அந்த இரண்டு மாடி கட்டிடம் நான் வடிவமைத்ததேயாகும். அத்தோடு எமது அமைப்பால் சமையல் வகுப்புகள், சுயதொழில் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. கொழும்பிலுள்ள மலே அமைப்புடன் இணைந்தும் பல வேலைத் திட்டங்களையும் செய்தோம்.
கேள்வி: கணவரின் நீண்டகால அரசியல் அனுபவத்தில் இருந்து இக்கால பெண்களின் அரசியல் ஈடுபாட்டுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
சமூகத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்றால் அரசியலால் தான் அதை செய்ய முடியும் என்பதை நான் நம்புவதில்லை. சேவை செய்யும் மனப்பான்மையுள்ளவர்கள் அதை செய்ய தயங்குவதில்லை. ஆனால் கால மாற்றத்தில் இன்று எல்லாமே அரசியல் மயமாகிவிட்டது. பெண்களின் உணர்வுகள், அவர்களின் தேவைகளை பெண்களே நன்கறிவர். ஆதலால் சட்டம் இருக்கும் இடத்தில் எமது கைகளும் உயர்ந்தாலே எமது உரிமைகளை இலகுவாக அடைய முடியும். அரசியல் எமக்கெதற்கு என்று வீட்டுக்குள் அடைந்து கிடக்காமல் வெளியே வந்து பாருங்கள், திருப்பம் தானே வரும். சரிநிகர் சமம் என்பது ஓர் சாதாரண விடயம். ஆகையால் பாலின வேறுபாட்டை மறந்து பதவிகளை கைப்பற்றுங்கள். அதன் பிறகு தைரியும் தானே வரும். செயற்படுத்துங்கள் பெண்களுக்கான சுய உரிமையை வெல்வதற்கு!
தினகரன் - 03.12.2017


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக