சந்திரிகா சுப்பிரமணியம்
ஊடகத்துறையில் மிக நீண்டகால அனுபவமுள்ள மூத்த
பத்திரிகையாளர், ஆய்வாளர், தற்போது அவுஸ்திரேலியாவில்
சட்டத்தரணியாக பணியாற்றி வருகிறார்.
ஊடகத்துறையையும், சட்டத்துறையையும் இணைத்து
அவர் பல விரிவுரைகளையும், பயிற்சிப்
பட்டறைகளையும் நடத்திவருகிறார்.
தற்போது இலங்கை வந்திருக்கும்
அவர் எமக்கு அளித்த விசேட பேட்டி...
இன்றைய ஊடகத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்களை எப்படி காண்கிறீர்கள்?
சிலர் பெண்களை மேலே வர விடுவதில்லை. அவர்களுக்கான வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை. ஆண் ஊடகவியலாளர்களையும் பெண் ஊடகவியலாளர்களையும் சரிசமமாக நடத்துவதில்லை. சில இடங்களில் சம்பளங்கள் ஒரே மாதிரி வழங்குவதில்லை. இதே பிரச்சினை ஊடகத்துறையில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இருக்கத்தான் செய்கின்றன. ஆண், பெண் ஊழியர்களுக்குமிடையில் பெரிய பனிப்போர் நடந்து கொண்டிருக்கின்றது. இட ஒதுக்கீடு செய்தது போல் எல்லா துறைகளிலும் இத்தனை வீதம் பெண்கள் இருக்க வேண்டும் என்ற ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். ஊடகவியலாளர்கள் என்றால் எல்லா வேலைகளையும் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். அது ஆசிரிய பீட தலைமைத்துவத்தின் கீழ் தான் வர வேண்டும். நிறைய இடங்களில் ஆசிரிய பீட தலைமைத்துவம் தட்டுப்பாட்டில் இருக்கிறது.
நிர்வாகம் சிலஆசிரிய பீட கொள்கைகளை வைத்திருக்க வேண்டும். 'பெண்களுக்கு வேலை செய்யக் கூடிய பாதுகாப்பு, இரவு எத்தனை மணி நேரம் என்றாலும் வந்து வேலை செய்யக் கூடிய சூழல் இருக்கின்றதா? நலம் மற்றும் பாதுகாப்பு இருக்கின்றதா? பாலியல் துன்புறுத்தல்கள் இல்லாமல் இருக்கின்றதா? இவை சார்ந்த கொள்கைகள் வைத்திருக்க வேண்டும். இதைத் தவிர முறையிடல் கொள்கை ஏதாவது வைத்திருக்க வேண்டும். ஏதாவது நடந்தால் எந்த விதிமுறையில் இவர்கள் முறையிடலாம்? அப்படி செய்தால் முறையிடுபவர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு என்ன பாதுகாப்பு இருக்கின்றது. இவையெல்லாம் எழுத்து மூலம் எங்கும் இருப்பதில்லை. இலங்கை முழுவதும் இந் நிலை தான். இவையெல்லாம் தனியாக செய்ய முடியாது. ஒரு நிறுவனம் சார்ந்த முயற்சி யால் தான் செய்ய முடியும். இதற்கு என்ன செய்யலாம் என்றால், எல்லா ஊடகவியலாளர்களும் ஒன்றிணைந்து ஒரு பெண்கள் அமைப்பொன்றை ஆரம்பிக்க வேண்டும். அதன் மூலம் பெண்கள் பணியிடங்களில் தொடர்பான சட்ட திட்டங்கள் , கொள்கைகள் அமைக்கப்பட வேண்டும். ஆனால் இதற்கு அதிக காலம் செல்லும். என்றாலும் முயற்சி செய்யலாம். இத் தலைமுறைக்கு இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறைக்காவது இது கிடைக்க வேண்டும்.
ஊடகங்களில் பெண்களின் பிரச்சினைகளை எப்படி கையாளலாம்?
முதலில் எந்தவொரு நிறுவனத்திலும் தொழிலாளர் கொள்கை ஒன்று இருக்க வேண்டும். இது ஒரு தொழிலாளர் பிரச்சினை. நீங்கள் ஒரு பெண்ணை வேலைக்கு வைத்து விட்டு அவர்களின் பாதுகாப்பிற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லையென்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஏதாவது ஒரு கொள்கை இருக்க வேண்டும். அது எங்கேயும் இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது அதிகமான பெண்கள் படித்து வேலைக்கு செல்கிறார்கள். அதுவும் பெண்கள். அவர்கள் உலகத்தைப் பற்றி நன்றாக புரிந்து கொள்பவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்குரிய துன்புறுத்தல் தொடர்பான முறையீட்டு முறை இல்லாமல் இருக்கின்றது. கட்டாயம் ஒரு முறையீட்டு முறை ஒன்று வைக்கத்தானே வேண்டும். அடுத்ததாக அப்படியாராவது நடந்து கொண்டால் அவர்களுக்கான என்ன நடவடிக்கை கடுமையாக இருக்கின்றது என்ற பயம் அவர்களுக்கு இருக்க வேண்டும். அப்போது தான் வேலை செய்யும் இடங்களில் அவ்வாறு நடக்காமல் இருக்கும்.
சட்டத்தரணியான நீங்கள், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் பெண்களுக்காக மேற்கொள்ளப்படும் சட்ட திட்டங்களை எவ்வாறு காண்கிறீர்கள்?
பாலியல் துன்புறுத்தலுக்கான சட்டங்களே சரியில்லை. வெளிநாடுகளில் எல்லாம் ஒரு பாலியல் துன்புறுத்தலை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் என்றால் அது குற்றவியல் சட்டத்தின் கீழ் வரும். அது உங்களுடைய நடத்தை பதிவில் பதியப்படும். நீங்கள் முக்கியமான பதவிகளுக்கு போகும் போது அந்த பதிவை பார்ப்பார்கள். அதனால் அவ்வாறு செய்ய பயப்படுவார்கள். இங்கு அவ்வாறான ஒரு முறை இல்லை. பெண்கள் தொடர்பான சட்டங்கள் பாதுகாப்பானவையாகவும், மிகவும் பலப்படுத்தப்பட்டவையாகவும் இருக்க வேண்டும்.
பெண்கள் ஊடகத்துறையில் முன்னோக்கி சொல்வதற்கு?
முதலில் உங்கள் மொழியை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஊடகத்துறையை பற்றிய போதிய அறிவு இருக்க வேண்டும். அதேநேரம் எதிர்த்து நிற்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். ஆங்கில அறிவு மிகவும் முக்கியம். அதை வாசிப்பதனால் தான் பெற்றுக் கொள்ள முடியும்.
ஊடகத்துறையில் உங்களை பாதித்த அனுபவங்கள் பற்றி?
பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளான பெண்கள் அதை விட்டு விட்டு வேறொரு இடத்துக்குச் சென்றால் அங்கும் இதே துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். இது என்னை மிகவும் பாதித்த விடயம். திறமைகள் இருந்தும் அவர்களை அப்படியே அடக்கி வைத்து விட்டு எந்தவிதமான வேலையையும் கொடுக்காமல் அடக்கி ஆளப்படுகிறார்கள்.
பெண்களின் அரசியல் பிரவேசத்தில் குடும்பச் செல்வாக்கின் ஆதிக்கம் வலுத்து வருகிறது. இதனை நீங்கள் எப்படி நோக்குகிறீர்கள்?
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஒரு விதவை பெண். ஆனால், அனுதாப அலையினூடாக அரசியலுக்குள் நுழைந்த முதன்மை பெண் அவர். கிறிஸ்ணசாமி என்ற ஒரு ஊடகவியலாளர் தான் 'த வீபிங் விடோ' என்ற தலைப்புடன் முதன் முதலில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் உரையை எழுதினார். அப்போது ஆரம்பித்த அனுதாப அலையை வைத்துக் கொண்டு தொடர்ந்து செல்லாம் என்பது ஒரு சாராருடைய கருத்து. அதேநேரம் இப்போது நிறைய படித்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் யாரும் அரசியலுக்கு முன்வருவதில்லை. நாளைக்கு தேர்தல் என்றால் இன்றைக்கு ஒரு புதுமுகத்தை காட்டினால் எப்படி? அரசியலுக்கு வருவதென்றால் இரண்டு மூன்று வருடமாவது சமூக சேவை செய்திருக்க வேண்டும். அப்போது தான் உங்கள் முகம் அனைவர் மத்தியிலும் பதிவாகும். பிறகு நீங்கள் களத்தில் இறங்கும் போது இவர் எங்கள் பிரதேசத்துக்கு இத்தனை சேவைகள் செய்திருக்கின்றார் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். அதை விட்டு விட்டு திடீரென்று முகத்தை காட்டி நானும் ஒரு பெண் பிரதிநிதி என்றால் எப்படி? அடிப்படையிலேயே நீங்கள் சில நல்ல காரியங்களை செய்து விட்டு அரசியலுக்கு வரும் போது அது சாத்தியமாகும்.
போராட்டக் களத்தில் தங்களை அர்ப்பணித்த பெண் போராளிகள் ஒரு நோக்கத்தோடு போராடினார்கள். அவர்களுக்கு இந்த அரசியலில் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ஆகக் குறைந்தது இந்த தமிழ் கட்சிகளாவது அவர்களை அரசியல் பற்றி மறு கல்வியூட்டி பொது வாழ்வில் இணைத்திருக்கலாம்.
உள்ளூராட்சி தேர்தலில் பெண்களுக்கான 25 வீத இட ஒதுக்கீட்டின் சாத்தியப்பாடு குறித்து?
முதலில் அரசரிவியல் பற்றியே தெரியாது. நீங்கள் அரசியலுக்கு வருபவர்களுக்கு அரசியல் கல்வி என்று எதை கொடுக்கப் போகின்றீர்கள்? பழையதை பார்த்து நாங்கள் அதை பின்பற்றி செய்வோம் என்பதை விட ஒரு சரியான புரிந்துணர்வுடனான அரசியல் கல்வி ஒன்று கட்டாயம் தேவையில்லையா? அரசியல் கல்வி இருக்க வேண்டும். சமுதாயத்துடன் சேர்ந்து நீங்கள் செய்ய வேண்டிய பணிகள் இருக்க வேண்டும். அரசியல் எப்படி நடத்துவது என்பது பற்றி தெரிந்திருக்க வேண்டும். இவையெல்லாம் நீங்கள் பெண்களுக்கு கொடுக்க கூடிய ஒரு வாய்ப்புக்கான சூழலை உருவாக்கி விட்டு பிறகு அவர்களை அரசியலுக்குள் கொண்டு வர வேண்டும். அடிப்படை அரசியல் பெண்களுக்கு ஊட்டப்பட வேண்டும். அதுவும் குறிப்பாக நீங்கள் மலையகத்தில் இருந்து பெண்களை கொண்டு வருவீர்கள் என்றால் சில நாட்களுக்கு முன்பே இவற்றை தொடங்கியிருக்க வேண்டும். திடீரென்று 25 வீதம் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்து விட்டார்கள் என்று 50 பேரை கொண்டு வந்து விட முடியாது. ஆகக் குறைந்தது அவர்களை அரசியலுக்கு கொண்டு வரும் போதாவது அவர்களை அறிமுகப்படுத்துவதற்கான வேலைகளை செய்ய வேண்டும். நிறைய பணிகள் செய்திருக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகள் இல்லாவிட்டாலும். இனியாவது செய்ய வேண்டும். முகம் தெரியாத ஒருவருக்கு வாக்களிக்க சொன்னால் எப்படி செய்வார்கள்? அடிப்படை சிலவற்றை நீங்கள் செய்திருக்க வேண்டும். அவற்றை செய்ய தவறிவிட்டு திடீரென்று வந்து செய்வது கஷ்டமான விடயம் தான்.
வேட்பாளராக களமிறங்கும் பெண்கள் பலவிதமான இம்சைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. அவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?
சமுதாயத்தில் உள்ள சில சீர்கேடுகளை நாங்கள் திருத்தவே முடியாது. அதே நேரத்தில் நாங்கள் எங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கடமை இருக்கின்றது. நீங்கள் அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்கும் போதே அதற்கான முன்னேற்பாடுகளோடு தான் செல்ல வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும், வாய்ப்புக்கு தேவையான தகுதிகள்,முயற்சிகள் எடுத்தலும், வளம், திறமை, ஆளுமை ஆகியவற்றை வளர்ப்படுத்தினால் மட்டுமே பெண்கள் முன்னேற முடியும்.
தினகரன் - 31.12.2017


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக