செவ்வாய், 8 செப்டம்பர், 2020

ஆணாதிக்கத்தோடு மோதுவது முட்டாள்தனம் - புர்கான் பீ இப்திகார்


இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஐந்து தசாப்தங்களுக்கு மேல் தன் ஆக்கங்களாலும் குரல்வளத்தாலும் வானொலி நேயர்களின் நெஞ்சோடு நெஞ்சம் கலந்தவர். காத்திரமான படைப்புக்களாலும் இனிய குரல் வளத்தாலும் இலங்கையில் மாத்திரமல்ல கடல் கடந்த நாடுகளிலும் ஆயிரமாயிரம் நேயர்களின் அபிமானத்தைப் பெற்றவர். நல்ல கருத்துகள் காற்றோடு போய்விடக் கூடாது என்று செயலுருவைப் பெற களம் இறங்கிய துணிச்சல் மிகு பெண். மாதர் மஜ்லிஸ், நெஞ்சோடு நெஞ்சம் நிகழ்ச்சிகளினூடாக வானலைகள் வழியே விழிப்புணர்வைத் தந்த அந்தக் குரலின் சொந்தக்காரி திருமதி புர்கான் பீ இப்திகாருடன்  ஓர் சந்திப்பு...
ஒர் இஸ்லாமிய பெண் என்ற ரீதியில் இலத்திரனியல் ஊடகப் பிரவேசம் எப்படி சாத்தியப்பட்டது?
எனக்கு 5 வயதாயிருக்கும் போதே வானொலியுடனான தொடர்பு உண்டானது. சிங்களம் மற்றும் தமிழ் நிகழ்ச்சிகள் இரண்டிலுமே நான் சிறு வயது முதல் பங்குபற்றி  வந்துள்ளேன். பிறகு எழுத்துத் துறையில் ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டு எழுதவும் தொடங்கினேன். இரண்டு மொழிகளிலும் மேடையில் பேசி அக்காலத்திலேயே தங்கப் பதக்கமும்  வென்றுள்ளேன். சுமார் 25 வருட காலம் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் தமிழ் மொழி பாடசாலைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் அறிவிப்பாளராக கடமையாற்றினேன். இதனூடாகவே 1959 இல் முதல் முதலாக இலங்கை வானொலிக்கு குரல் கொடுக்க தொடங்கினேன். அன்று தொடக்கம் இன்று வரை வானொலியோடு எனக்கு தொடர்பு இருக்கின்றது. முஸ்லிம் நிகழ்ச்சியூடாக பெண்களுக்கான மாதர் மஜ்லிஸ் என்ற நிகழ்ச்சியை பல வருடங்களாக செய்து வந்தேன். அதனால் இலங்கையில் மட்டுமல்ல தென்னிந்திய நேயர்கள், சிங்கப்பூர், மலேசியாவிலும் இந்நிகழ்ச்சியை கேட்டவர்களும்  இருக்கின்றார்கள். கிட்டத்தட்ட 35, வருடங்களாக முஸ்லிம் சேவையில் மாதர் மஜ்லிஸ்  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். 
முஸ்லிம் பெண்ணாக இருந்தும்  சற்று முன்னோக்கி நீங்கள் சென்ற பாதை...?
எனது சிறு பராயத்தில் பெண் பிள்ளைகள் எல்லோரும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று அந்நாளில் எங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இன்று சர்வதேச மட்டத்தில் பெண்கள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகின்றது. முஸ்லிம் நாடுகளும் அதில் பங்குபற்றுகின்றன.

என்னுடைய பங்குபற்றுதல் ஆசை சிறுவயதிலிருந்தே இல்லாமல் போய் விட்டது. ஆனாலும் விளையாட்டுப் போட்டி அறிவிப்பாளராக இருந்தேன். 5ம் வகுப்பில் படித்து கொண்டிருக்கும் போதே பெண் பிள்ளைகள் படிக்கக் கூடாது என்று எனது வாப்பாவுக்கு வேண்டியவர்கள் சொல்லி விட்டார்கள். வாப்பாவுமும் உம்மாவிடம் பாடசாலைக்கு அனுப்ப கூடாது என்று சொல்லிவிட்டார். உம்மாவுக்கு என்னை படிக்க வைக்க வேண்டும் என்று விருப்பம். பிறகு எனது பாடசாலை ஆசிரியர்கள் உம்மாவிடமும் வாப்பாவிடமும் கலந்துரையாடி என்னை பாடசாலைக்கு அனுப்ப சொன்னார்கள். நான் சாதாரண தரம் படித்துக் கொண்டிருக்கும் போது உம்மா என்னை சோர்டன் டைப்பிங் கிளாஸூக்கு அனுப்பி வைத்தார். அப்போது வீட்டுக்கு மொட்டைக் கடதாசி  ஒன்று வந்தது. பெண் பிள்ளையை டைப்பிங் கிளாஸூக்கு அனுப்புவது  சரியா? என்று.

இப்படி எல்லாவற்றுக்கும் தொடர்ந்து தடைகள் வந்தன. அப்போதெல்லாம் இதற்கான தீர்வு இருக்கின்றது என்பது எனக்குத் தெரியாது. அவர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டு தான் இருந்தோம். சிறுவயது முதலே இப்படி எதை எடுத்தாலும் செய்யக் கூடாது, என்று கேட்டு கேட்டு வளர்ந்தது தான் அதிகம். ஆனால் வேண்டாம் என்று சொன்னதை தான் நான் செய்திருக்கின்றேன். இந்த சவால்களை தாண்டியே நான் இந்நிலைக்கு வந்திருக்கிறேன்.
50 வருடங்களுக்கு மேல் ஒரு பெண்ணாக இத்துறையில் எவ்வாறு சாதிக்க முடிந்தது?​
அதற்கு காரணம் எனக்குள் இருந்த தைரியம் தான். தப்பான விடயம் எதுவானாலும்  நேரே நாசுக்காக சொல்லிவிடுவேன். ஆதலால் நான் நிலைத்திருந்ததற்கு அதுவும் ஒரு காரணம். அதே நேரம் என்னுடைய திறமைகளை நானே வளர்த்துக் கொண்டேன். நாம் ஒரு இடத்தில் இருப்பதற்கு எங்களுடைய திறமை, தகுதியை  வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரே நிலையில் நாங்கள் இருந்தால் எங்களை மடக்கி விடுவார்கள்.

போட்டிப் பொறாமைகள் இல்லாத இடங்கள் எங்கு தான் இருக்கின்றது. ஆனாலும் நான் எதையும் பொருட்படுத்துவதில்லை. நான் மிகவும் நொருங்கிப் போகும் அளவுக்கு பல சம்பவங்கள் நடந்தன. இனி இந்த தொழிலுக்கு வரக்கூடாது என்று  மனம் உடைந்து போன சம்பவங்களும் நடக்கத்தான் செய்தன. இருந்தாலும் கூட எனது நிகழ்ச்சிக்காக இத்தனை நேயர்கள் இருக்கின்றார்களே என்று நினைக்கும் போது நான் இவற்றை மறந்து விடுவேன். நேயர்களுக்கு நல்ல நிகழ்ச்சியை கொடுக்க வேண்டும் என்பதே எனது தலையில் இருந்த முதல் விடயம். அதை நான் கடைசி வரையிலும் செய்து கெண்டே தான் இருந்தேன். 
ஆண்களின் எழுத்தாற்றலை விட பெண்களின் எழுத்தாற்றல் குறைவானது என்று கூறப்படுகிறது அது பற்றி உங்களது கருத்து? 
அன்று தொடக்கம் ஆண்கள் நிறைய எழுதி வந்து கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அவர்கள் வெளி உலகத்திற்கு செல்கிறார்கள், வாசிக்கின்றார்கள், பலருடன் கலந்துரையாடுகின்றார்கள், பல இலக்கிய கூட்டங்களுக்கு செல்கிறார்கள். பெண்களுக்கு அதற்கான வாய்ப்புக்கள் குறைவு. ஆகவே எழுத்துத் துறையிலே பெண்கள் குறைவு தான் ஆனால் பெண்கள் இப்போது வளர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு வாய்ப்புக்களை கொடுத்து அவர்களது  திறமைகளை வெளிப்படுத்த நாம் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

அவர்களை இன்னும் வளப்படுத்திக் கொள்வதற்கான பயிற்சிகளை நடத்தலாம். அப்போது அவர்கள் இன்னும் வளமாக சிந்திக்கத் தொடங்குவார்கள். அவர்களது எழுத்துக்களிலே செழுமை, ஆளுமை அதிகரிக்கும். இவ்வாறு அவர்களை உருவாக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் உணர்வு பூர்வமாக சிந்தித்து தங்களது பிரச்சினைகளை வெளிக் கொணர்வார்கள். ஓர் ஆண் பிரச்சினையை முகம் கொடுப்பதை விட பெண் பெண் சம்பந்தமான பிரச்சினைகளை முகம் கொடுத்து எழுதும் போது அதில் ஒரு தெளிவு பிறக்கும். அதற்கான வாய்ப்புக்கள் வர வேண்டும். வருங்காலத்தில் அதிகமான பெண்கள் வந்து விடுவார்கள். 
ஆணாதிக்கத்தைப் பற்றி உங்கள் பார்வையில்...?
ஆண் தலைமைத்துவம் என்பது ஆரம்ப கால வரலாற்றிலிருந்தே இருக்கின்றது. ஆணாதிக்க சொற் பிரயோகங்கள் எல்லா இடங்களிலும் உண்டு. பலர் தங்கள் ஆதிக்கத்துக்குள் தான் பெண்கள் இருக்கின்றார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் குடும்பத்தை அவர்கள் அடக்கி ஆள நினைக்கிறார்கள்.

அடக்கி ஆள நினைப்பது தான் பிழை. அடக்கி ஆள முயற்சிக்கும் போது தான் குடும்பங்களுக்குள் பிரச்சினைகள். அவர்களுடைய ஆதிக்கத்தை செலுத்த முற்படும் போது அந்த பெண் தனக்குள் வெம்பிப் போகிறாள். அடக்குமுறை இல்லாவிட்டால் அந்த குடும்பம் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்பது அவர்களுக்கு புரிவதில்லை. அடக்குமுறையால் வீட்டில் உள்ள அன்பு இல்லாமல் போகின்றது. சில குடும்பப் பெண்கள் பயப்படுவது போல் நடிக்கிறார்கள். அடக்குமுறையை பிரயோகித்து பிரயோகித்து மற்றவர்களின் அன்பை இழந்து வீழ்ந்த தலைமைத்துவத்தை கூட சில குடும்பங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது. ஆகவே அடக்குமுறையை பிரயோகிக்காமல் அன்பை பிரயோகியுங்கள். எதிலுமே அடக்குமுறையென்றால் அதையும் மீறி ஒருவர் எழும்பத் தான் செய்வார். அவர்கள் எழும்பும் போது நீங்கள் நொருங்கிப் போய் விடுவீர்கள். அதற்குத் தான் அவர்களை எழும்ப விடாமல் அவ்வாறு அடக்குகிறார்கள். எங்கே எழும்பிடுவார், நம்மை கேள்வி கேட்டுவிடுவாள் என்று தான் அடக்குகிறார்கள். கடைசியில் அவர்கள் தான் தோற்று விடுவார்கள். அது குடும்பமாக இருந்தாலும் சரி சமூக ரீதியாக இருந்தாலும் சரி. 

நான் கடந்து வந்த பாதையில் ஆணாதிக்கத்தை தந்திரமாக உபயோகித்து கவிழ்த்து விடும் பணியை செய்தோர் இல்லலாமல் இல்லை. 
இன்றைய பெண்கள் முகம் கொடுக்கும் சவால்கள்...  அதற்கான தீர்வு என்ன?
இன்றைக்கும் சவால்கள் பல்வேறு ரீதியில் வந்து கொண்டு தான் இருக்கின்றன. தொழில் ரீதியாக, குடும்ப ரீதியாக.  குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டால் இன்றைக்கும் கையை நீட்டி அடிக்கும் கணவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.  உத்தியோகம் பார்க்கும் பெண் கூட அடியை வாங்கிக் கொண்டு மௌனமாகத்தான் இருக்கின்றார்.  அப்போது அவர் உள ரீதியாக  பாதிக்கப்படுகிறாள். தற்போது அநேகமான பெண்கள் தொழிலுக்கு செல்கின்றார்கள். வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால்  அவர்கள் வீட்டு வேலை, அலுவலக  வேலை... போன்ற அத்தனை சுமைகளையும் தாங்கிக் கொண்டு  ஆணுக்கும் பக்க பலமாக இருக்கின்றாள். இச் சுமைகளையும் சுமப்பது மட்டுமல்லாமல் அவள் உடல், உள ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றாள். ஆனால் அவர்கள் அதை வெளியே சொல்வதில்லை. எந்தப் பெண்ணும் பெண்ணியம் பேசிக் கொண்டு போவதில்லை. பெண்ணியம் என்றால் அவர்கள் வீட்டிற்கு அடங்காதவர்கள், இவர்களின் உடைகளில் வித்தியாசம் இருக்கும், அவர்கள் ஆண்களின் பேச்சை கேட்பதில்லை இவ்வாறான தவறான வரைவிலக்கணம் அப்போதே கொடுக்கப்பட்டு விட்டது. பெண்ணியம் என்றாலே தவறாக நினைக்கின்றார்கள்.

ஒரு பெண் சமுதாயத்தில் பலத் திறமைகளுடன் உயர்  நிலையில் இருந்தால், அவளை அப்படியே ஒடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவளை பற்றி ஒரு தப்பான கருத்தைச் சொல்லிவிடுகிறார்கள். அது அன்று தொடக்கம் இன்று வரை இருக்கின்றது. அந்த வசனத்தை பிரயோகித்து அவளை நிலைகுலையச் செய்து அவளை ஒரு குழப்பமான நிலைக்குத் தள்ளி அவளுடைய பலத்தை அப்படியே பலவீனமடையச் செய்து நொருக்கி ஸ்தம்பிதமடையச் செய்து விடுவார்கள். அது தான் அவர்களிடமுள்ள ஒரே ஆயுதம். நீ என்னவேண்டுமென்றாலும் சொல் என்று பெண் முன்வந்தால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. பெண்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும், பெண்களை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். நீங்கள் என்ன கொடுப்பது. அதை நாங்களே பெற்றுக் கொள்வோம். அதை அவர்களிடம் எதிர்பார்ப்பதும் முட்டாள் தனம். முதலில் நாம் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும். அதற்கு கல்வியறிவு தேவை. இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டால் பெண்கள் எழுந்து நின்று விடுவார்கள் என்று தான் ஆரம்பத்திலேயே பெண்கள் படிக்கக் கூடாது. படிக்க விட்டால் இவள் இதையெல்லாம் கேட்பாள் ஆகவே அவளுக்கு படிப்புத் தேவையில்லை என்று அதற்கு தடை விதித்தார்கள். இதை இப்போது பெண்கள் புரிந்து கொண்டு முன்னேறி வந்து விட்டார்கள். இவையெல்லாம் பெண்களுக்கு சவால் தான். இந்த சவால்களுக்காக ஆணாதிக்கவாதிகளுடன் மோதுவது முட்டாள் தனம்.

அதற்கு நாங்கள் பலம் வாய்ந்தவர்களாகவும் சிந்திக்கத் தெரிந்தவர்களாகவும் பெண்கள் தங்களை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தினகரன் - 16.07.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக