இந்த வாரம் சிங்களச் செய்திகளில் அதிகம் பேசப்பட்ட விடயங்களில் ஓரணு மஹாநாம பாடசாலை மாணவர்கள் அதிரடியாக யசோதரா பெண்கள் பாடசாலைக்குள் நுழைந்து செய்த அட்டகாசங்கள் பற்றியது.
பொதுவாக பாடசாலைகளுக்கு இடையில் “பிக் மேட்ச்” நடக்கும் காலங்களில் அந்தந்த பாடசாலை மாணவர்கள் திரண்டு ஊர்வலமாக போவது வழக்கமாகி விட்டது. இதனை ட்ரக்கிங் (trucking) என்று அழைக்கிறார்கள். இப்படி ட்ரக்கிங் போகும் வழியல் தாள வாத்தியங்களுடன், தமது அணியின் வெற்றிக்கான கோசத்தை எழுப்பியபடி செல்வார்கள். அதற்கு மேல் எதிரணியை சீண்டுகின்ற கோசங்களையும் கூடவே எழுப்புவார்கள். இந்த அணிகளின் ஆதரவாளர்கள் எதிரணி ஆதரவாளர்களுடன் மோதலை ஏற்படுத்துவதற்கு இப்படியான ட்ரக்கிங்கள் முக்கியமான காரணமாக ஆகியிருக்கிறது. இந்த பிக் மேட்ச் போட்டிகள் நடக்கின்ற காலங்களில் பெற்றோர், ஆசிரியர்கள், பொலிசார் அனைவருமே நெஞ்சில் பதட்டத்துடன் இருப்பார்கள். சண்டைகள் இந்த பிக் மேட்ச்களின் வழமையான ஒரு அங்கமாக ஆகிவிட்டது தான் இதற்கான காரணம்.
அது மட்டுமல்ல பாடசாலை இளம் மாணவர்கள் இதன் போது மதுபாவனை, போதைப்பொருள் பாவனையும் கூட இப்போது அங்கமாகிவிட்டது. ஆக, ஊர்வலம், ஆக்ரோஷம், போதை, சண்டை என்பன எதிர்பார்க்கக்கூடிய வழமையான மரபாக ஆகிஇருக்கிறது.
அதன் அடுத்த கட்ட வடிவம் தான் கடந்த 21 ஆம் திகதி யசோதர பெண்கள் பாடசாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள்.
ஏறத்தாழ 500க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். திடீரென்று பெருந்தொகையான மாணவர்கள் யசோதரா பெண்கள் பாடசாலை கேட் வழியாக கோஷமெழுப்பியபடி நுழைந்து அருகில் கிடைத்தவற்றை உலுக்கி சிதறடித்த படி ஆக்ரோஷமாக ஓடித் திரிந்தனர். முழுப் பாடசாலையும் பதட்டமும், பரபரப்புடனும் இருந்தது. மாணவிகளுக்கு அங்கிருந்த ஆசிரியைகள் காவல் காத்தபடி இருக்க மேலும் சில பெண் ஆசிரியைகள் இதனைக் கட்டுபடுத்த முயன்றனர். “ஏன் இப்படி செய்கிறீர்கள், வெளியே செல்லுங்கள்” என்று கத்தினர். ஆக்ரோஷமான மாணவர்களின் பலத்துடன் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு மாணவன் மட்டும் அகப்பட்டுக்கொள்ள ஏனைய மாணவர்கள் வெளியே ஓட்டமெடுத்தனர்.
இத்தனைக்கும் உள்ளே ஒரு பொலிஸ்காரர் இருந்தார். அவராலும் தனித்து ஒன்றும் செய்ய முடியவில்லை. வாயில் கதவை மூடிவிட்டு அகப்பட்ட மாணவரை விசாரித்துக் கொண்டிருந்தபோது அந்த மாணவனை விடுவிக்கும்படி கோரி வெளியே குழுமியிருந்த மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். கற்களைக் கொண்டு உள்ளே உள்ள சொத்துக்களை சேதப்படுத்தினர்.
வாயில் கதவை பலமாக சேர்ந்து தள்ளித் தள்ளி இருந்த போது அங்கிருந்த பொலிஸ்காரர் ஆரம்பத்தில் விடாமல் இருந்தபோதும் அந்த கதவை மீண்டும் திறந்துவிடவே மீண்டும் மாணவர்கள் பலர் உள்ளே புகுந்து பிடிபட்ட மாணவனை மீட்பதற்காக அங்கிருந்தவர்களைத் தாக்கினார்கள்.
இந்த சம்பவம் அனைத்தும் வீடியோவில் பதிவாகியிருக்கிறது. செய்தியிலும் காண்பிக்கப்பட்டது.
தொலைக்காட்சி செய்திக்கு பேட்டியளித்த யசோதரா பள்ளிக்கூடத்தின் காவலர் அந்த மாணவர்கள் குடி போதையில் இருந்ததாகத் தெரிவித்திருந்தார்.
பாடசாலை பருவ காலத்தில் மாணவர்கள் ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்வது பாடசாலையில் இருந்து தான். பெற்றோரை விட அதிக பொறுப்பு பாடசாலையையே சார்கிறது. இந்த விடயத்தில் பாடசாலையும், பெற்றோரும் அப்பொறுப்பை மாறி மாறி ஒருவர் மீது மற்றவர் சுமத்திக் கொண்டாலும் கூட பாடசாலைக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கவே செய்கிறது.
ஆனால் இங்கு பாடசாலை மாணவர்களே, சீருடையுடன், பாடசாலையின் பேரால், இன்னொரு பாடசாலை மீது அட்டூழியம் புரிந்துள்ளனர்.
இங்கு பெண்கள் பாடசாலையை அவர்கள் தெரிவு செய்ததன் ஆணாதிக்கத்தனத்தை நாம் இனங்கண்டுகொள்ளவேண்டும். இளம் மாணவிகள் பற்றிய ஆண் மாணவர்கள் கொண்டிருக்கின்ற மதிப்பீடுகள் பற்றி நாம் கவனித்தாக வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட பருவ வயதில் பெண்களை வெறும் பண்டமாகவும், “சரக்காகவும்” மட்டுமே காணும் பண்பு எங்கிருந்து வளர்கிறது என்று இனங்காண வேண்டும். இதில் பாடசாலை சூழலின் பாத்திரம் என்ன என்பதும் பரிசீலனைக்கு உரியது.
நமது பாடசாலைக் கல்வி முறையானது ஒழுக்கத்துடன் சேர்த்து, சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம் என்பவற்றையும் ஒரு முறையியலோடு கற்பிக்கும் ஒன்றாக இல்லை. ஏற்கெனவே புரையோடிப்போயுள்ள மோசமான நிறுவனமயப்பட்ட ஆதிக்க சித்தாந்தங்களுக்குள் பொருத்துவதற்கான கல்வி முறையே நீடித்து வருகிறது.
அந்த கல்வி முறை உருவாக்கிய மாணவர்கள் தான் அடுத்தபடியாக உயர்கல்வி கற்கைகளின் போது பகிடிவதை என்கிற அளவுக்கு அவர்கள் வளர்ந்து விடுகிறார்கள். இலங்கையில் சமீப காலமாக பெண்களின் மீது (ஆண்களின் மீதும் தான்) பாலியல் ரீதியில் இந்த பகிடிவதை புதிய வடிவமெடுத்திருப்பதை அண்மைய செய்திகளில் இருந்து கவனித்து வருகிறோம்.
புதிய தலைமுறையினரிடம் இன்று வளர்ந்துவரும் இந்த “ட்ரக்கிங் கலாசாரம்” ஒரு அழுகிய சமூக நோயாகி பரவிவிடக்கூடாது.
நம் முன் இருக்கும் மிகப் பெரிய கடமை கல்வியை ஊட்டுவதை விட, ஒழுக்கத்தை ஊட்டுவதை முன்னுரிமைப் படுத்துவதே.
கல்விக்கும் அறிவுக்கும் உள்ள சம்பந்தம் அரிதே. கல்வியுடயோர் எல்லாம் அறிவாளிகளும் அல்ல. அறிவாளிகள் அனைவரும் கல்வி கற்றோரும் அல்லர். பகுத்தறிவை தரும் கல்வி முறையாலேயே சமூகத்தை வளப்படுத்த முடியும். பலப்படுத்த முடியும்.
நன்றி - தினகரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக