பெண்களின் அரசியல் ஈடுபாடுகளுக்கு ஆண்களே தடை! | உமாச்சந்திரா பிரகாஷ்
பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஆகிய மூன்று ஊடகத்துறையிலும் முக்கிய பதவிகளில் சேவையாற்றி, நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பில் லங்கா சுதந்திர கட்சியில் தெரிவாகிய ஒரே தமிழ் பெண் உமாச்சந்திரா பிரகாஷ். ஊடகத்துறையில் தன்னை ஒரு தனி ஆளுமையாக வளர்த்துக் கொண்டவர். மூன்று துறைகளிலும் உயர் பதவிகளை வகித்தவர். ஊடகத்துறை தந்த ஊக்கமும் தன்னம்பிக்கையும் அவரை அரசியலில் ஈடுபட ஆளுமை வழங்கியதாக கூறும் அவர், ஊடகப் பாசறை பெண்களின் ஆளுமை விருத்திக்கு அனைத்து வழிகளிலும் உற்சாகத்தை வழங்கக் கூடியது என்கிறார்.
உங்கள் சுய விபரங்களுடனான சிறு அறிமுகம்
எனது பெயர் பிரகாஷ் உமாச் சந்திரா, சொந்த ஊர் மட்டுவில் வடக்கு சாவகச்சேரி. முதல் நிலை பள்ளி படிப்பு மட்டுவில் சந்ரமோசா வித்தியாலயம், அதனைத் தொடர்ந்து சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றேன். யுத்த சூழ்நிலை காரணமாக எங்களுக்கு 1996ம் ஆண்டு கொழும்புக்கு இடம்பெயர வேண்டியேற்பட்டது. அதன் பின்னர் கொழும்பில் க.பொ.த. உ\த கற்றேன். பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இடம்பெயர்ந்த மாணவர்கள் என்பதால் பாடத்திட்டங்களை சரியாக பூர்த்திசெய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
தொழில்துறை பிரவேசம் பற்றி?
முதன் முதலாக 2001ம் ஆண்டு சக்தி வானொலியில் அறிவிப்பாளராக சேர்ந்தேன். அங்கு 2001--2009ம் ஆண்டு வரை பணியாற்றினேன். 2009ம் ஆண்டு அங்கிருந்து விலகி செல்லும் போது மூத்த நிகழ்ச்சியாளராக இருந்தேன். அதன் பின் 2009ம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையில் உதவி ஊடக முகாமையாளராக சேர்ந்தேன். வீரகேசரியில் வேலை செய்யும் போது மூத்த ஊடகவியலாளரான அன்னலக்ஷ்மி ராஜதுரையின் வழிகாட்டல் கிடைத்தது. அவரின் ஒத்துழைப்பில் தமிழ் மக்களின் கலை, கலாசாரம், பண்பாடு பாரம்பரியங்கள் பற்றி அதிகமாக எழுதினேன். அதையே என் குறிக்ேகாளாக கொண்டு முன்னெடுத்தேன்.
அக்காலப்பகுதியில் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் புஸ்பரத்தினத்துடன் இணைந்து தமிழர் தொல்லியல் தொடர்பான ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டேன். அந்த அனுபவங்கள் என்னை ஓர் உயர் நிலைக்கு இட்டுச் செல்ல வழியமைத்தது எனலாம். மீண்டும் 2013ம் ஆண்டு சக்தி தொலைக்காட்சியில் செய்தி முகாமையாளராக பதவியேற்று அதில் இரண்டு வருடங்கள் கடமை புரிந்தேன். அப்போது என் தந்தையின் சுகவீனம் காரணமாக செய்திப் பிரிவிலிருந்து நிகழ்ச்சி பிரிவுக்கு மாற்றலானேன். கடந்த டிசம்பர் மாதம் வரை சக்தி தொலைக்காட்சியில் சக்தி டிவி முகாமையாளராக கடமையாற்றினேன். அதன் பிறகு சில காலம் வீரகேசரி இணையத்தளத்தில் செய்தி ஆசிரியராக இருந்தேன். அக்காலப்பகுதியில் எனது யாழ். மண் இணையத்தளம் இரண்டு முறை சிறந்த இணையத்திற்கான விருது பெற்றது. நான் பதினாறு வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றினேன். அதுமாத்திரமன்றி மூன்று புத்தகங்களும் எழுதியுள்ளேன். 'பெட்டகம், கலைகேசரியில் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூலாக வெளிவந்தது. அடுத்து 'நல்லூர் கந்தசுவாமி பெருங் கோயில்' என்ற ஆவணப் புத்தகம் பெரும் நன்மதிப்பைப் பெற்றுத்தந்தது.
உங்கள் அரசியல் பிரவேசம்...?
25% பெண் பிரதிநிதித்துவ அறிமுகத்தோடு நிறைய கட்சிகள் என்னிடம் கேட்டனர். ஆனால், எனக்கு ஓர் ஆசை அல்லது ஆதங்கம் இருந்தது. யுத்தம் முடிவடைந்து விட்டது, எம் இனம் 30 வருடங்களாக அனுபவித்த துன்பங்களை களத்தில் இருந்து நேரடியாக அனுபவித்தவள் என்பதால், எமது இளம் சந்ததியினருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற மன உறுத்தல் இருந்தது. யுத்தம் முடிந்து விட்டாலும் எமக்கு எந்த பலனும் கிட்டவில்லை. நாம் இன்னும் கடந்து வந்த பாதையையே உற்று நோக்காமல் மாற்று வழிகளை நோக்கி செல்ல வேண்டும். அந்த மாற்று வழிகளில் எமது சந்ததியினரின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு யாரிடம் உதவியை பெறலாம், எது எமக்கு சாத்தியமாகும் என்ற எண்ணத்தில் தான் நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டேன். ஆனால், சிலர் என்னை விமர்சித்தனர். தேசிய கட்சிகள் எமக்கு எதையும் செய்யப் போவதில்லை. இனவாதமே மிச்சம் என்றனர். எனவே என் பார்வையில் ஜனாதிபதி நல்லாட்சியை கொண்டு செல்லும் விதம் மேன்மையாக இருந்தது. ஊழலுக்கு எதிரான அவரின் போராட்டம் எல்லா அரசியல்வாதிகளுக்கும் முன்னுதாரணமாக இருந்தது. பிரதமர் கூட பிணை முறி மோசடியில் பேசப்பட்டவர். நல்லாட்சி நாயகனுடன் இணைந்து எமது மக்களுக்கு சேவையாற்ற நினைத்தேன், நடந்து விட்டது.
நீண்டகால ஊடகத்துறை அனுபவம் உங்கள் அரசியலுக்கு எவ்வாறு உதவியது?
தன்னம்பிக்கையும் ஊக்கமும் எனக்கு ஊடகம் தந்த இரு கவசங்களாகும். ஆனால், அரசியலில் ஈடுபட்ட சில நாட்களில் எனது வாகனம் தாக்கப்பட்டது. அரசியலில் இருக்கும் எந்த ஓர் ஆணும் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை விரும்பவில்லை என்பது பட்டவர்தனமாக தெரிந்தது. 16 வருட ஊடகத்துறை அனுபவம் அதையெல்லாம் தாண்டி செல்ல மனவலிமையை தந்தது. அதேபோல் சாதாரண ஒரு பெண்ணிடம் இதையெல்லாம் தாங்கி, தாக்குபிடிக்கும் மனவலிமை இருப்பதில்லை. பெண்கள் சார்பாக பேசுவதற்கு பெண்கள் தான் முன்வர வேண்டும். எந்த ஓர் ஆணும் அரசியலில் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை கூறுவதில்லை. இப்படியான பிரச்சினைகளை கடந்து வர பெண்களுக்கு தன்னம்பிக்கையும் ஊக்கமும் வேண்டும். இவற்றை எனக்கு ஊடகத்துறை அனுபவம் தந்தது.
தனியே வெளியே செல்வது, பல பேரை சந்திக்கும் சந்தர்ப்பம் ஆகியவை எனது அரசியலுக்கு பக்க பலமாக இருந்தது எனலாம். எந்த ஒரு விடயத்துக்கும் அடி பணிந்து போகக் கூடாது. (உதாரணத்திற்கு பாலியல் தொல்லைகள்...) எதிர்த்து நிற்க வேண்டும். பயப்படாமல் போராட வேண்டும். அப்போது தான் எங்களை நாங்களே பாதுகாத்து கொள்ளலாம்.
பெண்கள் தமது நேரங்களை பொன்னான நேரங்களாக்கி கொள்ள வேண்டும். அரசியலில் மாத்திரமல்ல எந்த துறையிலும் அது இருக்க வேண்டும். பொதுவாக பெண்களுக்கு சில குணாம்சங்கள் இருப்பதாக சொல்வார்கள். பொறாமை, புறம்பேசுதல், இதற்கு காரணம் என்னவென்றால், அவர்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்படும் போது (உ-ம்) திறமையான ஒரு பெண்ணுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு பாலின வேறுபாட்டால் ஆணுக்கு வழங்கப்படுகிறது. பெண் திருமணம் முடித்து குடும்பமானால் இவ்வாறான வேலைகளை செய்ய முடியாது. இதனால் பெண் மன உளைச்சலுக்கு உள்ளாகிறாள். அவள் தன் மன குமுறல்களை இன்னொரு பெண்ணிடம் சொல்லும் போது அவை பொறாமை, புறம் பேசுதலாக உருவெடுக்கிறது.
பெண்களின் கோட்டாவிலே பிரதேச சபை உறுப்பினராக வந்துள்ளீர்கள். பெண்களுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
பெண்கள் கோட்டாவில் நான் வரவில்லை. கொழும்பு கிழக்கு தொகுதியில் லங்கா சுதந்திரக் கட்சி சார்பாக அதிகூடிய வாக்குகள் பெற்றுள்ளேன். எனவே இவர்களுக்கு கிடைத்த விகிதாசார முறையில் ஒரு தேர்தல் தொகுதிக்கு ஓர் ஆசனம் என்ற ரீதியில் வழங்கினார்கள். அதில் ஜனாதிபதி தலைமையில் அமைத்த குழுவினரின் பரிந்துரையின் கீழ் கொழும்பு தமிழ் பேசும் பெண்களை பிரதிநிதித்துவம் செய்பவராக எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. கொழும்பில் வாழும் பெண்களின் பிரச்சினைகளை தீர்ப்பதே எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகும்.
எனவே கொழும்பு மாவட்டம் முழுவதும் பெண்களையும் நலிவுற்ற பெண்கள், கணவனை இழந்து வாழும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் இவை தொடர்பாக ஆராய்ந்து அவர்களுடைய முன்னேற்றத்திற்காக பாடுபடுவது தான் என்னுடைய இலக்காக இருக்கின்றது. அரசாங்கத்திடம் இருந்து எனக்கு கிடைக்கக் கூடிய வளங்களை நான் சரியாக பயன்படுத்துவேன். அந்த நிதி உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய்ச் சேர வேண்டும் என்பதில் நான் கண்ணும் கருத்துமாக இருக்கிறேன். இதற்காக நான் நேரடியாக அந்தந்த இடங்களுக்குச் சென்று அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய தொலைபேசி இலக்கத்துடன் அவர்கள் என்னை நேரடியாகவே தொடர்பு கொள்ளலாம். இன்னும் நான்கு வருடங்கள் இருக்கின்றது. அதனால் ஒரு ரூபாவாக இருந்தாலும் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும். அது என்னுடைய ஒரு கொள்கையாக நான் கருதுகிறேன். நாங்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட போது எங்களுக்குள் நாங்களே பேசிக் கொண்ட விடயம் 60 உறுப்பினர்கள் செய்யாத வேலையை நாங்கள் 12 பேர் இந்த நான்கு ஆண்டுகளுக்குள் செய்து முடிப்போம் என்று திடசங்கற்பம் கொண்டோம். நாங்கள் ஒவ்வொருவராக ஒவ்வொரு பகுதியை பிரித்துக் கொண்டு எங்களால் முடிந்த விடயங்களை இயலுமானவரை செய்வது என்று முடிவு எடுத்துள்ளோம்.
பெண் பிரதிநிதித்துவம் இம்முறை தேர்தலில் அதிகரிக்கப்பட்டுள்ளதா? இனிவரும் காலங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று நினைக்கின்றீர்கள்?
இல்லை என்று கூற முடியாது. கடந்த காலங்களை எடுத்து நோக்கினால் நிறைய பெண்கள் இம்முறை தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். சில சபைகளில் 25% நிரூபிக்கப்படாவிட்டாலும் கணிசமான பெண்கள் தெரிவாகியுள்ளனர். குறிப்பாக கூறுவதென்றால் 2018ம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் பெண்களை பொறுத்தவரை வரலாற்றில் பதியப்பட வேண்டிய முக்கியமான ஒரு தேர்தலாகும்.
இன்னும் நான்கு வருடங்கள் இருப்பதால் இந்த மாற்றத்தை ஏனைய பெண்கள் முன்னுதாரணமாக கொண்டு அடுத்த தேர்தலில் அவர்களினுடைய பங்களிப்பு அதிகமாக இருக்கும் என நம்புகிறேன். அதே நேரத்தில் கட்சிகளும் இந்த சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தும் பட்சத்தில் பெண் வேட்பாளர்களை தயார்படுத்த வேண்டிய சூழலில் நாங்களும் அவர்களுடன் கட்டாயமாக இருப்போம். எனவே இந்நாட்டில் ஆளுமை மிக்க பெண்கள் பலர் பல்துறையை சார்ந்து இருக்கிறார்கள். ஆனால், இந்த சட்டம் கொண்டுவரப்படாத காரணத்தால் இலங்கையில் தொடர்ச்சியாக ஆண்களினுடைய ஆதிக்கத்தில் பெண்களுக்கு அரசியலில் குறைந்தளவான பங்களிப்பு தான் கிடைத்திருக்கிறது.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, சந்திரிக்கா அம்மையார் இவர்கள் போன்ற ஆளுமைகள் இருந்த நாட்டில் பெண்களினுடைய அரசியல் இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.
கொழும்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் நான் தமிழ் பேசும் பெண்களிடம் சென்று அவர்களினுடைய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப் போகிறேன். அவர்களுடன் தான் தொடர்ந்தும் இருக்கவும் போகிறேன். அப்பொழுது அவர்களில் பல்துறை சார்ந்த ஆளுமை மிக்க பெண்களை நாங்கள் அடையாளம் கண்டு அவர்களை கட்சிக்கு அறிமுகப்படுத்துவதன் ஊடாக அடுத்து வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிடக் கூடிய ஒரு வாய்ப்பை உருவாக்கலாம். அதுவும் தமிழ் பேசுகின்ற பெண்கள். அவர்கள் எந்த மதமாக இருந்தாலும் தமிழ் பேசுகின்ற பெண்களினுடைய அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கு என்னால் முடிந்ததை செய்வேன். எனவே பெண்களாகிய நீங்கள் வெற்றி பெற்ற பெண்களை முன்னுதாரணமாக கொண்டு, உங்கள் ஆளுமைகளை வளர்த்து அரசியலில் உங்கள் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.
பெண்களின் அரசியல் ஈடுபாட்டுக்கு தடையாக இருப்பது எவை என கருதுகிறீர்கள்?
முதலாவது தடை ஆண்கள். ஏனென்றால் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது ஆண்கள். கட்சிகளின் உயர் பதவிகளில் இருக்கும் ஆண்கள் பெண்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை.
அவர்கள் பெண்களை அரசியலுக்கு கொண்டு வரவேண்டும் என்பதில் முனைப்பு காட்டுவதில்லை. ஆனால் பெண்களை தங்களுக்கு வேலை செய்யக் கூடிய ஒருங்கிணைப்பாளராகவோ, மக்களினுடைய தொடர்பாடல் அதிகாரியாகவோ வைத்துக் கொண்டு அந்த மக்களினுடைய வாக்குகளை பெற்றுக் கொள்கிறார்கள். அவ்வாறு பெற்றுக் கொண்டு பெண்களுக்கு ஆசனங்களையோ, அரசியலில் அங்கீகாரத்தையோ கொடுப்பதில்லை. ஊடகம் மட்டுமல்ல எந்தத் துறையில் இருந்தாலும் அரசியலுக்குள் பிரவேசிப்பது கஷ்டமான காரியம்.
இனி வரும் காலங்களில் உங்கள் முன் இருக்கும் சவாலாக எதை கருதுகிறீர்கள்?
என்னை பொறுத்தவரை ஊடகம் குடும்பம் இரண்டையும் சமமாக கொண்டு சென்றேன். இனிவரும் காலங்களில் அது மூன்றாக போகிறது. எந்த சந்தர்ப்பத்திலும் நான் எனது ஊடகப் பணியை நிறுத்தப் போவதில்லை.
இந்த மூன்று விடயங்களையும் சமமாக கொண்டு செல்ல என்னை தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும். என் கணவரின் முழு பங்களிப்பு இருப்பதால் என்னால் தொடர்ச்சியாக இயங்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நியாயமான ஊழல் அற்ற அரசியலை கொண்டு செல்ல வேண்டும் என்பது எனது தலையாய கடமையாக கருதுகிறேன். நான் ஒரு ஊடகவியலாளராக அநேக அரசியல்வாதிகளிடம் நிறைய கேள்விகளை கேட்டிருக்கிறேன். சில குறைகளை நீங்கள் சரியாக நிறைவேற்றவில்லை, ஊழல் நடந்துள்ளது என்று. அவர்களின் குற்றங்களை சுட்டிக்காட்டிய நான் அவர்களுக்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டும். சேவையாற்ற கூடிய அரசாங்க கட்சியில் இணைந்து சேவை செய்தாலே மக்கள் குறைகளை தீர்க்க முடியும். பசியுடன் இருப்பவர்களிடம் நல்லிணக்கம் பேச முடியாது. முதலில் அவர்களின் பசியை போக்குவோம். பெண்களின் நிர்வாகம் நேர்மையானது. வீறு நடைபோட்டு வெற்றி காணுவோம்!
தினகரன் - 01.04.2018




















